லண்டன்: அன்னாசி பழத்தில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட், மாங்கனீஸ், பொட்டாஷியம் போன்ற தாதுப் பொருட்கள் உள்ளன. இது, உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த பழமாக திகழ்கிறது. குறிப்பாக, குளிர் காலத்தில் இதை உண்ணும்போது உடலுக்கு ஏராளமான நன்மைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்த அன்னாசி பழத்தின் வகைகளில் உலகின் மிக விலை உயர்ந்ததாக இங்கிலாந்தின் கான்வால் தோட்டத்தில் விளைவிக்கப்படும் ஹெலிகான் அன்னாசி பழம் உள்ளது. இதன் ஒன்றின் விலை 1,000 பவுண்டுகள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
நம்ம ஊர் ரூபாய் மதிப்பில் ஒரு அன்னாச்சி பழத்தின் விலை 1 லட்சம் என பிபிசி தெரிவித்துள்ளது. ஹெலிகான் அன்னாசி பழம் 1819-ம் ஆண்டில்தான் முதல் முதலாக இங்கிலாந்துக்கு கொண்டு வரப்பட்டது. எனினும், தோட்டக்கலை வல்லுநர்கள் நாட்டின் தட்பவெப்பநிலை அன்னாசி சாகுபடிக்கு ஏற்றபடி இல்லை என்பதை உணர்ந்திருந்தனர். இதனால், அவர்கள் அவற்றை சாகுபடி செய்வதற்கான பிரத்யேக வழிமுறைகளை உரு வாக்கினர்.
செலவு அதிகம்: இதற்கான செலவினம் அதிகம் என்பதால் ஒவ்வொரு அன்னாசி பழமும் ரூ.1 லட்சம் விலை பெறுகிறது. மேலும், இவற்றை பொதுவில் ஏலம் விடும்பட்சத்தில் ஒவ்வொரு அன்னாசி பழமும் ரூ.10 லட்சம் வரை விலை போகும் என்று ஹெலிகன் தோட்டத்தின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் கூறினார். விக்டோரியன் கிரீன்ஹவுஸில் விளைவிக்கப்பட்ட இரண்டாவது அன்னாச்சி பழத்தை ராணி இரண்டாம் எலிசபெத் பரிசாகப் பெற்றதாக ஹெலிகன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.