தமிழகத்தில் கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான நீர்நிலைகள் தனது முழு கொள்ளளவை எட்டி விட்டன. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தை அடுத்த மதுராந்தகம் அருகே ஏரியின் மதகு உடைந்து ஏரியில் சேமித்து வைக்கப்பட்ட நீர் வெளியேறி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் 86 ஏக்கர் பரப்பளப்பில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் வடகிழக்கு பருவமழை மற்றும் தற்பொழுது ஏற்பட்ட புயலில் பெய்த மழையின் காரணமாக தனது முழு கொள்ளளவை எட்டியது. இந்த நிலையில் இன்று காலை புதுப்பட்டு ஏரியின் மதகில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் முழுவதும் வெளியேறி வருகிறது.
இதன் காரணமாக புதுப்பட்டு, மேலப்பட்டு, திருகணம் ஆகிய கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் விளைநிலத்தில் இந்த ஆண்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஏரியில் ஏற்பட்டுள்ள உடைப்பை மண் மூட்டை கொண்டு அடைக்கும் பணியில் நீர்வளத் துறையும் பொதுமக்களும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.