புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை கண்டு நாடாளுமன்றத்தில் உள்ள சிலருக்கு (எதிர்க்கட்சிகள்) பொறாமை ஏற்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது காங்கிரஸ் எம்பி அனுமுலா ரேவந்த் ரெட்டி, ‘‘அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு எப்போதும் இல்லாத வகையில் முதன் முறையாக 83-ஆக சரிவடைந்துள்ளது. ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருவதை மத்திய அரசு கவனிக்கவில்லையா? என்று கேள்வியெழுப்பினார்.
இதற்கு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதில்: ஒவ்வொரு நாட்டு கரன்சிகளுக்கும் எதிரான இந்திய ரூபாயின் செயல்பாடு வலுவாகவே உள்ளது.டாலர்-ரூபாய் மதிப்பில் ஏற்படும் அதிக ஏற்ற இறக்கங்களை சமன்செய்ய ரிசர்வ் வங்கி அந்நியச் செலாவணி கையிருப்பை பயன்படுத்தி வருகிறது. ரூபாய் மதிப்பை நிலைநிறுத்த சந்தையில் ரிசர்வ் வங்கி தொடர்ந்து தலையிட்டு வருகிறது.
இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.ஆனால்,இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதில் எதிர்க்கட்சிகளுக்கு சிக்கல் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சியைப் பார்த்து அனைவரும் பெருமிதம் கொள்ளவேண்டும். ஆனால், சிலர் அதனைநகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறார்கள். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப்பார்த்து சிலர் பொறாமைப் படுகின்றனர். இவ்வாறு பதில் கூறினார்.