திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். குடும்பத்தினரை கொலை செய்ததாக கருதப்படும் கூலித் தொழிலாளியும் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றியம் மோட்டூர் கிராமத்தில் வசித்தவர் தொழிலாளி பழனி (40). இவரது வீட்டில் இருந்து இன்று காலை யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, பழனியின் மனைவி வள்ளி (37), மகள்கள் திரிஷா, மோனிஷா, மகாலட்சுமி, மகன் சிவசக்தி ஆகிய ஐந்து பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் கிடந்தனர்.
தூக்கிட்டு நிலையில் பழனி இறந்து கிடந்துள்ளார். மேலும் மற்றொரு மகள் பூமிகா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பூமிகாவை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திருவண்ணாமலை கிராமிய காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். ஆறு சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குடும்பப் பிரச்சனை காரணமாக மனைவி மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனை வெட்டிக் கொலை செய்து விட்டு பழனி தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் வேறு காரணமா என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் காவல்துறையினர் விசாரணையை நடத்தி வருகின்றனர்