பெங்களூரு / புதுடெல்லி: கர்நாடகாவின் பெலகாவி, பீதர், கார்வார் மாவட்டங்களை சேர்ந்த 814 கிராமங்களை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என மராத்திய அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக மகாராஷ்டிர அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரத்தால் இரு மாநிலங்களின் எல்லையில் பதற்றமான சூழல் நீடிக்கிறது .
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் நேற்று முன்தினம் இரவு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அமித் ஷா கூறும்போது, “இரு மாநிலங்களும் ஒத்துழைத்தால் மட்டுமே இந்த விவகாரத்தில் நல்ல தீர்வை எட்ட முடியும். எல்லை விவகாரத்தை அரசியலமைப்பின்படியே தீர்க்க முடியும். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை இரு மாநிலங்களும் அமைதி காக்க வேண்டும்” என்றார்.