சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை கடந்த மாதம் தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தை தாக்கிய மாண்டஸ் புயல் காரணமாக மரப்பலகையினால் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதம் அடைந்தது. இதனால் மாற்றுத்திறனாளிகள் கடற்கரை பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் மெரினாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் மழைக்காலத்திற்கு பிறகே பாதை திறக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் கடலில் எழும் அலைகள் வெளியே வரும் தூரத்தை கணக்கிட்டு பாதையின் நீளம் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடல் அரிப்பால் பாதிக்காத வண்ணம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.