கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் தி.மு.க அரசைக் கண்டித்து அ.தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்டப்பேரவை துணை சபா நாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நேற்று (15-12-2022) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதற்காக, அ.தி.மு.க கட்சிக் கொடிகளும் பேனர்களும் போராட்டம் நடக்கும் பகுதியில் வைக்கப்பட்டன. கட்சி சார்ந்த நிகழ்வுகளில் கொடி, பேனர் வைக்கக்கூடாது எனக் கூறி போலீஸார் கொடியை அகற்றினர். அப்போது, பொள்ளாச்சி ஜெயராமன் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில் ஜெயராமன், “நாங்க யாருனு தெரிஞ்சுக்கணும்னு நினைக்குறீங்களா. இந்த மாதிரி பண்ணுனா உண்ணாவிரதம் டி.எஸ்.பி ஆபீஸ் முன்னாடிதான் நடக்கும். தி.மு.க போராட்டம் நடத்துனா கொடியே வைக்க மாட்டாங்களா? யாரும் இனி கொடி கட்டமாட்டாங்கன்னு சொல்லிட்டா… பொள்ளாச்சில நான் கட்டுன கொடி எல்லாத்தையும் அகற்றிடறோம். சட்டம் ஒழுங்கு எப்படி இருக்குனு பாக்குறீங்களா? எந்தெந்த ஊர்ல எவ்வளவு திருட்டு போயிருக்குனு இன்னைக்குப் பேசறேன். நாங்க ஆட்சியில இருந்தப்ப இப்படிதான் பண்ணோமா?” என ஆவேசமாகப் பேசுகிறார். மேலும் ஜெயராமன் இந்தப் போராட்டத்தின்போது பெண் டி.எஸ்.பி ஒருவரை ஒருமையில் பேசியதாக வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

`தி.மு.க தூண்டிவிட்டுச் செயல்படும் போலீஸாரிடம் இப்படிதான் பேசவேண்டும்’ என அ.தி.மு.க-வினரும்… `போலீஸாரிடம் இவ்வாறு பேசிய முறை தவறு’ என தி.மு.க-வினரும் பரஸ்பரம் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோ விவகாரம் குறித்து பொள்ளாச்சி ஜெயராமனிடம் விளக்கம் கேட்டபோது, “உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பே அனுமதி வாங்கி விட்டோம். இந்த நிலையில், போராட்டம் நடத்துவதற்குப் பந்தல் போட்டு கொடி நட்டோம்.

போலீஸார் பந்தல் போடக் கூடாது என்று நட்ட கொடிகளைப் பிடுங்கி இடையூறு செய்தனர். முறையாக அனுமதி பெற்று நடைபெறும் போராட்டத்தில் மூன்று நாள்களாக போலீஸார் மிரட்டி வருகின்றனர்” என்றார்.