இன்று சென்னையில் உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அதன் தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமை தாங்கிய நிலையில், துணைத் தலைவர்கள் பவர்.பாண்டியன் நாராயணன் மற்றும் முரளி சோழாஞானம் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த கூட்டத்திற்கு செயலாளர் ஆர்.முருகக்கனி வரவேற்பு தந்தார்.
இந்த கூட்டத்தில் முதலில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்தக் கூட்டத்தில் சிலம்ப விளையாட்டு வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும். மூத்த ஆசான்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்க வேண்டும். அரசு பள்ளி, தனியார் பள்ளிகளிலும் சிலம்பாட்டத்தை கட்டாய பயிற்சி பாடமாக ஆக்க வேண்டும் என்று பல கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.
மேலும், முதல்வர் கோப்பை விளையாட்டில் சிலம்பத்தையும் சேர்த்து அனைத்து மாவட்டங்களிலும் போட்டி நடத்தி, அதற்கான இறுதிப் போட்டியை மாநில அளவில் சென்னையில் நடத்த வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.