தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த 14 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் அவருக்காக ஒதுக்கப்பட்ட அலுவலகத்திற்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார்.
குறிப்பாக முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் நடத்துவது தொடர்பான கோப்பிலும், ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு மாதம் 6000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் கோப்பிலும், கோவையைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனைக்கு 4 லட்சம் ரூபாய் சிறப்பு பரிசு வழங்கும் கோப்பையிலும் கையெழுத்து விட்டார். இதனை தொடர்ந்து அமைச்சராக பொறுப்பேற்று முதல் நிகழ்ச்சியாக நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக மாணவர்களை சந்தித்து உரையாடினார்.
அப்பொழுது பேசிய விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “திமுகவின் தேர்தல் வாக்குறுதியின் படி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மினி விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுப்பது தான் எனது முதல் இலக்கு. முதல்வர் தங்கக் கோப்பை காண விளையாட்டுப் போட்டியில் கபடி, சிலம்பம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்க உள்ளது. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.