உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் குரோஷியா- மொராக்கோ அணிகள் மோதுகின்றன.
தோகா, கத்தாரில் நடந்து வரும் 22 ஆவது உலகக் கிண்ண கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.
இதில் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நாளை இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினாவை சந்திக்கிறது.
முன்னதாக இன்று (சனிக்கிழமை) கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் இரவு 8.30 மணிக்கு தொடங்கும் 3ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் அரைஇறுதியில் தோல்வி கண்ட குரோஷியா-மொராக்கோ அணிகள் சந்திக்கின்றன.
அரைஇறுதிக்கு முன்னேறிய ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த முதல் அணி என்ற பெருமையை பெற்ற மொராக்கோ அணி தரவரிசையில் 22 ஆவது இடத்தில் உள்ளது. முதலாவது லீக் ஆட்டத்தில் குரோஷியாவுடன் கோலின்றி சமப்படுத்திய மொராக்கோ அணி பெல்ஜியம், கனடா அணிகளை தோற்கடித்து தனது பிரிவில் (எப்) முதலிடத்தை பிடித்து நாக்-அவுட் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. 2-வது சுற்றில் ஸ்பெயினுடன் கூடுதல் நேரம் முடிவில் கோலின்றி டிரா செய்த மொராக்கோ அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதுடன், கால்இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் போர்த்துகலை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது. அரை இறுதியில் 0-2 என்ற கோல் கணக்கில் பிரான்சிடம் தோல்வி கண்டது.
குரோஷியா அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் மொராக்கோவுடன் கோலின்றி டிரா கண்டது. அடுத்த ஆட்டத்தில் கனடாவை வென்றது. அதற்கு அடுத்த ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் கோலின்றி டிரா செய்து தனது பிரிவில் 23ஆவது இடத்துடன் நாக்-அவுட் சுற்றுக்குள் கால்பதித்தது. 2-3ஆவது சுற்றில் ஜப்பானுடன் கூடுதல் நேரத்தில் டிரா (1-1) செய்த குரோஷியா அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 3-1 என்ற கோல் கணக்கில் சாய்த்தது. கால்இறுதியில் பிரேசிலுடன் கூடுதல் நேரம் முடிவில் டிரா (1-1) செய்து பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தது. அரைஇறுதியில் 0-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் சரண் அடைந்தது. வலுவான அணிகளை முந்தைய சுற்று ஆட்டங்களில் வீழ்த்தி இருக்கும் இவ்விரு அணிகளும் அதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.