புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தில் பள்ளி விளையாட்டுப் போட்டியின்போது மாணவர் கழுத்தில் ஈட்டி பாய்ந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது கழுத்தில் இருந்து ஈட்டி அகற்றப்பட்டது.
ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு பலங்கிர் மாவட்டத்தில் உள்ள அகல்பூரில் உள்ள மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு விழா நேற்று நடந்தது.
இதன் ஒரு பகுதியாக ஈட்டி எறிதல் போட்டி நடந்தது. இதில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் சதானந்த் மெஹரின் கழுத்தில் எதிர்பாராதவிதமாக ஈட்டி பாய்ந்தது.
இதில் படுகாயமடைந்த அந்த மாணவரை பள்ளி நிர்வாகத்தினர் சிகிச்சைக்காக பீமா பாய் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
மெஹரின் கழுத்தில் இருந்த ஈட்டியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றினர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வரும் மாணவர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, மாணவரின் சிகிச்சைக்காக உடனடியாக அவரது குடும்பத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க கலெக்டர் ராணா உத்தரவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த முதல்வர் நவீன் பட்நாயக் மாணவர் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
மேலும் மாணவரது மருத்துவ சிகிச்சைக்கான செலவை முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement