விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் 7-வது வார்டு உறுப்பினராக இருந்து வருகிறார் அ.தி.மு.க-வை சேர்ந்த முருகவேல். இந்நிலையில், நேற்று முன்தினம் (17.12.2022) அப்பகுதியை சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் சாலை பகுதியில் கழிவுநீர் தொட்டியை அமைக்க முற்பட்டுள்ளார். இதனை முருகவேல் எதிர்த்த நிலையில், அப்பணியை செய்வதற்கான பொருள்களை கொண்டு வந்திருந்த தி.மு.க ஒன்றிய கவுன்சிலரின் கணவர் விஜயராகவன் என்பவர் இவரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு இரு தரப்புக்கும் இடையே கைக்கலப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் முருகவேல், ஆரோவில் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றுள்ளார். இதனை அறிந்த விஜயராகவன் தரப்பினர், காவல் நிலையத்திற்குள் புகுந்து முருகவேலை போலீஸார் முன்னிலையிலேயே தாக்க முற்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

எனவே, தாக்குதலுக்கு உள்ளாகியதாக கூறப்படும் முருகவேலிடம் பேசினோம். “எனக்கு சொந்த கிராமம் திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்கு உட்பட்ட மொரட்டாண்டி. நான் 7-து வார்டு உறுப்பினராக இருக்கிறேன். சம்பவத்தன்று மதியம், நான் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, என் வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தாசில்தார் ஒருவர் அவருடைய வீட்டின் முன்பு, சாலையின் நடுவே கழிவுநீர் தொட்டி அமைப்பதற்காக ஜே.சி.பி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டார். அதை பார்த்த நான், ‘என்ன பண்ணுகிறீர்கள்’ என்றேன். கழிவுநீர் தொட்டி அமைக்கப் போவதாகவும், அதுகுறித்து பேச வேண்டியவர்களிடம் பேசிவிட்டதாகவும் கூறினார்.
‘ஒரு அரசு அதிகாரியாக இருந்து கொண்டு, நீங்களே இப்படி சாலையில் கழிவுநீர் தொட்டியை அமைக்கலாமா? இது அநாகரிகம்’ என்றேன். உடனே, 8 – 12வது வார்டு வரையிலான ஒன்றிய கவுன்சிலர் காமாட்சியின் கணவர் விஜயராகவனுக்கு போன் பண்ணி தகவல் சொன்னார் தாசில்தார். அங்கிருந்த ஜே.சி.பி, வாகனம் மற்றும் பொருள்கள் அனைத்தும் விஜயராகவன் உடையதுதான். அங்கு வந்த விஜயராகவன், ஜே.சி.பி ஓட்டுனரிடம்… “யார் வேலையை நிறுத்தியது” என கேட்டுவிட்டு, “நீ யார் இங்கு பள்ளம் எடுக்க கூடாதென்று சொல்வதற்கு” என்று என்னை கேட்டார். ‘நடுத்தெருவில் பள்ளம் எடுக்கப்படுகிறது. நீங்களும் இதே ஊர்காரர் தானே.. நீங்களும் கேளுங்கள். இவரை பார்த்து நாளை ஊரில் உள்ளவர்களும் இப்படி தான் செய்வார்கள். இதை தயவு செய்து நிறுத்துங்கள். நான் இந்த வார்டு உறுப்பினர், அதனால்தான் கேட்கிறேன்’ என்றேன் விஜயராகவனிடம்.

உடனே, “இவன் என்ன பண்ணுறானு பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு, ஜே.சி.பி ஓட்டுநரிடம் கூறி பள்ளம் எடுத்தார் விஜயராகவன். நான் ஜே.சி பி ஓட்டுனரை நிறுத்தச்சொன்னேன். உடனே, என் சட்டையை பிடித்து இழுத்து கன்னத்தில் அடித்த விஜயராகவன், அவருடன் இருந்தவர்களை வைத்து என்னை அடித்தார். “உன்னுடைய தராதரம் என்ன… என்னுடைய தராதரம் என்ன… நீ என்கிட்ட சரிக்கு சரியாக நின்னு பேசுற..!” என்று என்னை பார்த்து கேட்டார். இவர், அந்த வார்டுக்கு சம்பந்தப்பட்ட கவுன்சிலர் கூட கிடையாது. புவனேஸ்வரி ராமதாஸ் என்பவர் தான் 1 முதல் 7 வார்டு வரையிலான ஒன்றிய கவுன்சிலர். ஆனால், இவர் அதே கிராமத்தை (மொரட்டாண்டி) சேர்ந்தவர் என்பதால் இப்படி ஆதிக்கம் செலுத்துகிறார்.
இந்நிலையில்தான் என்னுடைய அண்ணன் பையன் ஜேம்ஸ்க்கு நான் தகவல் சொல்ல, அவர் வந்து இதனை கேட்டார். அப்போது அவரையும் விஜயராகவன் கீழே தள்ளிவிட, இருவருக்கும் இடையே கைகலப்பு ஆகிவிட்டது. உடனே, ஆரோவில் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க நாங்கள் சென்றோம். அங்கு 20 பேர் தடி, கம்புடன் வந்தனர். அதில் நான்கு பேர் காவல் நிலையம் உள்ளே வந்து எங்களை அடிக்க முற்பட்டனர். விஜயராகவனின் மச்சான், காவலரின் டேபிள் மீது இருந்த ஒரு வெயிட்டை எடுத்து என்னை அடித்தார். உடனே போலீஸார் என்னை ஆய்வாளர் அறையில் வைத்து பூட்டிவிட்டனர். உடனே ஜன்னல் பகுதியில் வந்து, அவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள். உடனே கோட்டகுப்பம் டி.எஸ்.பி, பஞ்சாயத்து தலைவர், எங்கள் பகுதி ஒன்றிய கவுன்சிலர் ஆகியோர் அங்கு வந்துவிட்டனர். இருதரப்பிலும் ஆட்கள் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்கள். “ஒரே ஊர்காரங்க… சமாதானமாக போங்க…” என்று ஒரு நெருக்கடி கொடுத்து, என்னை சமாதானத்திற்கு உட்படுத்தினார்கள்.

உயிருக்கு பயந்து, உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று பயந்துதான் நான் சமாதானம் கொடுத்தேன். எனக்கு அதில் முழுக்க முழுக்க உடன்பாடே கிடையாது. போலீஸ் ஸ்டேஷன் உள்ளேயே வந்து தாக்க வருகிறார்கள் எனும்போது, எனக்கு ஏது பாதுகாப்பு.
அதனால்தான் சமாதானத்திற்கு எழுதிக் கொடுத்தேன். எனவே போலீஸூம் அப்போது வழக்கு பதியவில்லை. இந்நிலையில், இரவு 11 மணி போல விஜயராகவனின் தரப்பினர் என்னுடைய உறவினரான ஜேம்ஸ் வீட்டுக்கு வந்து மிரட்டல் விடுத்து சென்றிருந்தனர்.
மேலும், நேற்று காலையில் சுமார் 20 அடி ஆட்களுடன் வந்த விஜயராகவன் தரப்பினர், ஜேம்ஸ் உள்ளிட்ட அவரது வீட்டார் 5 பேரை சரமாரியாக தாக்கிவிட்டு சென்றுவிட்டனர். அவர்கள் இப்போது ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலத்த காயமடைந்த ஜேம்சை ஆட்டோ மூலமாக ஆரோவில் காவல் நிலையம் அழைத்துச் சென்று, பாதுகாப்பு கேட்டு புகார் கொடுத்துள்ளோம்” என்றார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்க விஜயராகவனை தொடர்பு கொண்டோம். ஆனால் அழைப்பு ஏற்கப்படவில்லை. அவர், விளக்கம் அளிக்கும் பட்சத்தில் அதனை உரிய பரிசீலனைக்கு பின்னர் பதிவிட தயாராக உள்ளோம்.

இந்நிலையில், ஆரோவில் காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை தொடர்பு கொண்டு பேசினோம். “நேற்று நாங்கள் ஏதும் சமரசத்தில் ஈடுபடவில்லை. அவர்களுடைய உறவுக்காரர்கள் தான் பேசிக் கொண்டார்கள். முருகவேல் தரப்பினர் தற்போது புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.