சென்னை: பொங்கல் பரிசு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: உயரிய நோக்கோடு கொண்டுவரப்பட்ட பொங்கல் பரிசு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இத்திட்டத்தை நம்பி கரும்பு, வாழை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை ஏராளமான விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
தற்போது பொங்கல் பரிசுத் திட்டத்தை கைவிட்டு குடும்ப அட்டைக்கு தமிழக அரசு ரூ.1,000 வழங்கப் போவதாக செய்திகள் வந்து கொண்டிருப்பதால், விவசாயிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே, சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துறையின்கீழ் கூட்டுறவு, வேளாண், உணவு துறைகளை ஒருங்கிணைத்து, இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்.
இன்று (டிச.19) நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் பொங்கல் பரிசுத் திட்டத்தை கைவிடாமல் இருக்க உரிய முடிவு எடுக்க வேண்டும்.
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் தொழிற்பூங்கா அமைப்பதற்கு விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் விளைநிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என தமிழக அரசு அறிவித்து இருப்பதை வரவேற்கிறோம். அதேநேரம் அந்த பகுதியில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டால், விளைநிலங்கள் அழிந்து போகும். எனவே, வேறு தரிசு இடங்களை கண்டறிந்து அங்கு தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இத்திட்டத்தை நம்பி கரும்பு, வாழை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.