உலககோப்பை வெற்றி கொண்டாட்டம் கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் மோதல்: 3 பேருக்கு அரிவாள் வெட்டு

திருவனந்தபுரம்: உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றதை அடுத்து, கேரளாவில் 4 இடங்களில் ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. 5 போலீசார் காயமடைந்தனர். உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் அர்ஜென்டினா-பிரான்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சம அளவில் கோல் அடித்த நிலையில் பெனால்டி கிக் மூலம் அர்ஜென்டினா 4-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. கேரளாவில் பொதுவாக கால்பந்துக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.

இந்தநிலையில் கண்ணூர், பள்ளியான்மூளை பகுதியில் பெரிய திரை வைக்கப்பட்டு ஏராளமான ரசிகர்கள் இறுதிப் போட்டியை பார்த்து கொண்டிருந்தனர். அர்ஜென்டினா வெற்றி பெற்றவுடன் அந்த அணி ரசிகர்கள் வெற்றி ஊர்வலம் நடத்தினர். அப்போது திடீரென ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அதே பகுதியை சேர்ந்த ஆதர்ஷ்(25) அனுராக்(26) மற்றும் விவேக்(24) ஆகிய 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் ஆதர்ஷ் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 3 பேரும் கண்ணூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் தலச்சேரி, கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலும் மோதல் ஏற்பட்டது. இதில் 5 போலீசார் காயமடைந்தனர். கொல்லத்தில் அர்ஜென்டினா ரசிகர்கள் நடத்திய ஊர்வலத்தில் கலந்து கொண்ட அக்‌ஷய்(17) என்ற பள்ளி மாணவன் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.