சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கிவைத்துப் பேசியதாவது: அரசுப் பள்ளிகளை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தும் முன்னோடித் திட்டமாக ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தரமானக் கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. முதலிடம் பெறுவதற்கான அனைத்துப் பணிகளையும் பள்ளிக்கல்வித் துறை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில், பள்ளிக் குழந்தைகள் எந்தவிதமான தடங்கலும் இல்லாமல், மனநிறைவுடன் கற்கக்கூடிய சூழலை திராவிட மாடல் ஆட்சி உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், உள்ளூர் மக்கள், முன்னாள் மாணவர்கள், தொழில் துறையினர் மற்றும் உலகமெங்கும் வாழும் தமிழர்களுடன் பள்ளி மேம்பாட்டுக்கு இணைந்து செயல்படுவதற்கு ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ திட்டம் அடித்தளம் அமைத்திருக்கிறது.
இந்த திட்டத்துக்காக நீங்கள் செலுத்தக்கூடிய ஒரு ரூபாய் நன்கொடையும்கூட, வெளிப்படைத்தன்மையுடனும், கடமையுணர்வுடனும், பள்ளிகள், ஆசிரியர்கள், குழந்தைகளின் வளர்ச்சிக்காக செலவிடப்படும்.
அதற்கு தொடக்கமாக, நானே முதல் நபராக எனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தை இந்தத் திட்டத்துக்கு அளிக்கிறேன். நமது குழந்தைகளின் கல்வி மற்றும் பள்ளிகளின் வளர்ச்சிக்காகத்தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
எனவே, அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள், திரைக்கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும், பரந்த உள்ளத்துடன் தங்களது பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது, “நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் திட்டத்தின் மூலம் தென்னிந்தியாவில் 2,500 பள்ளிகளைத் தத்தெடுத்துள்ளனர். அவற்றில் 2,000 பள்ளிகள் தமிழகத்தில் உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் திட்டத் தலைவரும், டிவிஎஸ் நிறுவனத் தலைவருமான வேணு சீனிவாசன் பேசும்போது, “மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கும் இந்த திட்டம் வழிவகுக்கும்” என்றார். நல்லெண்ணத் தூதர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் பேசும்போது, “தரமானக் கல்வி, நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், சிறந்த பள்ளிக் கட்டமைப்புகள், விளையாட்டு மற்றும் கல்விக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள், உடல் நலம் காப்பது உள்ளிட்டவை அடங்கியதாக நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் திட்டம் அமைந்துள்ளது” என்றார்.
நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, பள்ளிக்கல்வித் துறைச் செயலர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் மற்றும் அரசு அதிகாரிகள், எம்.பி., எம்எல்ஏ-க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திரைப்படத் துறையினர், தொழிலதிபர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
வேருக்கு நீராவோம்…: ‘நம்ம பள்ளி ஃபவுண்டேஷன்’ திட்டம் தொடர்பாக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கல்வி எனும் பேராயுதத்தைக் கொடுத்து, ஏழை, எளிய பின்புலத்தில் இருந்து வரும் மாணவர்களை ஏற்றிவிடும் ஏணியாக உள்ள நமது அரசுப் பள்ளிகளைக் காக்க ‘நம்ம பள்ளி ஃபவுண்டேஷன்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பினரும் பரந்த உள்ளத்துடன் நிதியுதவி தாருங்கள். வேருக்கு நீராவோம்” எனப் பதிவிட்டுள்ளார்.