வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பியுனஸ் ஏர்ஸ்: கால்பந்து உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி, தாயகம் திரும்பியது. கோப்பையுடன் திறந்த பஸ்சில் ஊர்வலமாக சென்ற வீரர்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
உலக கோப்பை கால்பந்து தொடரின் 22வது சீசன் கத்தாரில் நடந்தது. லுசெய்ல் மைதானத்தில் நடந்த பைனலில் மெஸ்சியின் அர்ஜென்டினா, இளம் வீரர் எம்பாப்வே இடம் பெற்ற பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் 3-3 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால், ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 1978, 1986ல் சாம்பியன் ஆன அர்ஜென்டினா, 36 ஆண்டுக்கு பின் மீண்டும் உலக கோப்பையை கைப்பற்றியது.

இதனையடுத்து அந்நாட்டு ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் திளைத்தனர். மெஸ்சியின் சொந்த ஊரான ரோசாரியோ தெருக்களில் உலக கோப்பை வெற்றியை கொண்டாட, மக்கள் கடல் போல திரண்டனர்.
இந்த நிலையில், தோஹாவில் இருந்து மாட்ரிட் வழியாக அர்ஜென்டினா வீரர்கள் கோப்பையுடன் தாயகம் திரும்பினர். உள்ளூர் நேரப்படி இன்று (டிச.,20) அதிகாலை அர்ஜென்டினாவின் பியுனஸ் ஏர்ஸ் விமான நிலையம் சென்றடைந்த விமானத்தில் இருந்து முதலாவதாக கேப்டன் மெஸ்சி உலக கோப்பையுடன் வெளியேறி கோப்பையை உயர்த்தி காட்டினார்.
அதனைத் தொடர்ந்து மற்ற வீரர்களும் விமானத்தில் இருந்து கீழிறங்கினர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர்கள் திறந்தநிலை பஸ்சில் ஏறி கோப்பையுடன் வளம் வந்தனர். வெற்றி கொண்டாட்டதையொட்டி அந்நாட்டில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பெருந்திரளான மக்கள், நீலம் மற்றும் வெள்ளை நிற ஜெர்சியில் தெருக்களில் அணிவகுத்து தங்கள் சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
லட்சக்கணக்கான மக்கள் அர்ஜென்டினா கொடியை அசைத்தும், பட்டாசுகளை வெடித்தும், டிரம்ஸ் இசைத்தும் ஆரவாரத்துடன் வரவேற்றனர். பெருமளவு மக்கள் மொத்தமாக ஒன்றுக்கூடியதால் அர்ஜென்டினா தெருக்கள் அதிர்ந்தது.
ரசிகர்களின் திக்குமுக்காட வைத்த வரவேற்பை ஏற்றுக்கொண்டு பஸ்சில் வந்த வீரர்கள் கையசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement