கத்தாரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தது. தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரம் முடிவிலும் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோப்பையை உச்சி முகர்ந்தது
தனது நாட்டிற்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார் மெஸ்சியின் உலக கோப்பை கனவு நேற்று முன்தினம் நனவானது. இறுதி போட்டியில் பிரான்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றதன் மூலம் அவரது கால்பந்து கனவு முழுமையாக நிறைவேறியது.இந்த வெற்றியால் தென்அமெரிக்க நாடான அர்ஜென்டினா தேசமே கொண்டாட்டத்தில் குலுங்கியது.
இந்த நிலையில் மெஸ்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உலகக்கோப்பையுடன் பல புகைப்படங்களை பதிவிட்டார். மெஸ்சியின் அந்த உலகக்கோப்பை புகைப்படம் தற்போது இன்ஸ்டகிராம் வரலாற்றில் அதிகம் லைக் செய்யப்பட்ட புகைப்படம், என்ற சாதனை படைத்துள்ளது.
தற்போது வரை 59 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது.