கட்டிட அனுமதிக்கு 2 ஆண்டு கூடுதல் அவகாசம் – கரோனா பாதிப்பையொட்டி நடவடிக்கை

சென்னை: கரோனா ஊரடங்கைக் கருத்தில் கொண்டு, கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்தாண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் கட்டிட அனுமதி பெற்றவர்களுக்கான கால அவகாசத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டித்து வீட்டு வசதித் துறை அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் அமலில் உள்ள ஒருங்கிணைந்த கட்டிட விதிகளின் படி, தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்ட அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போது, முதலில் 5 ஆண்டுகள் அனுமதியளிக்கப்படுகிறது. அந்த காலகட்டத்துக்குள் கட்டிடப்பணிகள் முடிக்கப்படாத பட்சத்தில், கோரிக்கை அடிப்படையில் மேலும் 3 ஆண்டுகள் அந்த அனுமதி நீட்டிக்கப்படுகிறது. இது பொதுவான நடைமுறையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

கட்டுமானப் பணிகள் பாதிப்பு: இதற்கிடையே, கடந்த 2020-ம்ஆண்டு மார்ச் இறுதி முதல் கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இடையில் ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்டாலும், கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டன. சிலஇடங்களில் இந்தாண்டு தொடக்கம் வரை அந்தப் பாதிப்புகள் இருந்து வந்தன.

இவற்றைக் கருத்தில் கொண்டு கட்டிட அனுமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என்று கட்டுமான நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கோரிக்கையை ஏற்று: இந்த கோரிக்கையின் அடிப்படையில், குறிப்பாக கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்தாண்டு மார்ச் 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் கட்டிட அனுமதி பெற்றவர்களின் அனுமதிக்கான கால அவகாசம், 2 ஆண்டுகள் கட்டுமானப் பணிகள் இழப்பைக் கருத்தில் கொண்டு,மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக் கப்படுகிறது என்று வீட்டுவசதித் துறை தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.