பல்வேறு மதங்கள், போதனைகள், வேதங்கள், பகவத் கீதை பள்ளி பாடத்தில் இடம்பெற வேண்டும்

புதுடெல்லி: நாட்டின் பல்வேறு மதங்கள், போதனைகளுக்கு பள்ளி பாடப்புத்தகங்களில் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இந்திய வேதங்கள், பகவத் கீதை பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.

கல்வி, விளையாட்டு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று முன்தினம் தாக்கல் செய்தது. அதில், தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) பள்ளி பாடப்புத்தங்களில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டு உள்ளன. நாடாளுமன்ற நிலைக்குழு தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவ, மாணவியருக்கு அச்சு பாடப்புத்தகங்கள் மட்டுமன்றி மின்னணு வடிவிலும் பாடங்களை தொகுத்து வழங்க வேண்டும். மின்னணு வடி விலான பாடங்கள் மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும்.

பன்முகத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி இந்திய வரலாறு கற்பிக்கப்பட வேண்டும். வரலாற்று பாடங்களில் ஏதாவது தவறு, சர்ச்சைகள் எழுந்தால் உடனடியாக அந்த தவறுகள் திருத்தப்பட வேண்டும்.

விக்ரமாதித்தன், சோழர்கள், சாளுக்கியர்கள், விஜயநகர பேரரசு, கோந்த்வானா, திருவிதாங்கூர், வடகிழக்கு பிராந்திய மன்னர்கள்குறித்து பள்ளிப் பாடப்புத்தகங்களில் போதுமான தகவல்கள் இல்லை. இந்த பேரரசுகளின் வரலாறு, பள்ளிப் பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டும்.

பெண் தலைவர்கள், பெண் சாதனையாளர்கள் குறித்த தகவல்கள் பாடப்புத்தகங்களில் குறைவாகவே இடம்பெற்றுள்ளன. அந்த குறை நீக்கப்பட வேண்டும்.எம்.எஸ். சுப்புலட்சுமி, ஜானகி அம்மாள், சென்னம்மா உள்ளிட்டோரின் வரலாறு, சாதனைகள் பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டும். இதன்மூலம் மாணவிகளின் தன்னம்பிக்கையை வளர்க்க முடியும்.

திருக்குறள் ஒழுக்க நெறிகள்: பள்ளி பாடப்புத்தகங்களில் செம்மொழியான தமிழுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. தமிழ், பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளைக் கவுரவிக்க வேண்டும். தமிழ் கவிஞர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் மிகச்சிறந்த ஒழுக்கநெறிகளைப் போதிக்கிறது. பாடப்புத்தகங்களில் திருக்குறள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.

வரலாற்று பாடப்புத்தகங்களில் இந்திய சுதந்திர போராட்ட வரலாறுதவறாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. சுதந்திர போராட்ட வீரர்கள்,குற்றவாளிகளைப் போன்று சித்தரிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த தவறுகள் திருத்தப்பட்டு சுதந்திர போராட்டகதாநாயகர்களுக்கு மரியாதை, கவுரவம் அளிக்க வேண்டும். அதிகம் அறியப்படாத சுதந்திர போராட்ட தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சுதந்திரத்துக்குப் பிந்தைய வரலாறுபாடப்புத்தகங்களில் பதிவு செய்யப்பட வேண்டும்.

இந்தியாவின் பல்வேறு மதங்கள், போதனைகளுக்கு பாடப்புத்தங்களில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்திய வேதங்கள், பகவத் கீதை போதனைகள் பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.