காந்தி நகர், குஜராத்தில், ஓடும் பேருந்தில் தன் மனைவியை கணவனே கழுத்தறுத்து படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சூரத் மாவட்டத்தில் போலீஸ்காரராக வேலை பார்ப்பவர் அம்ருத் ரத்வா.
இவரது மனைவி மங்குபென், அரசு பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வந்தார். அம்ருத் தன் மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு, அவருடன் அடிக்கடி சண்டையிட்டுள்ளார். சமீபத்தில் மனைவியுடன் போனில் சண்டையிட்ட அம்ருத், அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.
இதையடுத்து, தான் வேலை பார்க்கும் இடத்தில் இருந்து, 200 கி.மீ., பயணித்து, தன் மனைவி வேலை செய்யும் பிகாபூருக்கு வந்தார். இங்கு, தன் மனைவி கண்டக்டராக பணி செய்யும் பஸ்சில் ஏறியுள்ளார். ஓடும் பஸ்சில் மனைவி அருகே சென்ற அம்ருத், திடீரென கத்தியால் அவரைக் குத்தி, அவரது கழுத்தையும் அறுத்தார். இதில், மங்குபென் பஸ்சிலேயே உயிரிழந்தார்.
டிரைவரும், மற்ற பயணியரும் பீதியில் தப்பி ஓடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கொலை செய்த அம்ருத், அதே பஸ்சில் மனைவியின் உடலருகே, போலீசார் வரும் வரை அமர்ந்திருந்தார். தகவலறிந்து வந்த போலீசார், அம்ருத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement