புனே: மகாராஷ்டிராவில் ஆண், பெண் பாலின விகிதம் குறைந்துள்ளதை முன்வைத்து தங்களுக்கு மணப்பெண்ணை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று அரசை வலியுறுத்தி திருமணமாகாத ஆண்கள் பேரணியை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆண்-பெண் பாலின விகிதம் சமீப காலமாக குறைந்து வருகின்றது. 1000 ஆண்களுக்கு 889 பெண்கள் மட்டுமே உள்ளனர். பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கின்றது. இதனால் ஆண்களுக்கு திருமணம் செய்வதற்கு பெண் கிடைப்பது சிரமமாக இருந்து வருகின்றது. இந்நிலையில் சோலாப்பூரில் திருமணமாகாத ஆண்கள் இணைந்து நேற்று முன்தினம் பேரணி நடத்தினார்கள். இதில் கலந்து கொண்ட ஆண்கள் தங்களை மணமகன் போன்று அலங்கரித்து இருந்தனர். சிலர் மணமகன் போன்று உடையணிந்து குதிரையில் பேரணியில் கலந்து கொண்டனர்.
மகாராஷ்டிராவில் ஆண்-பெண் விகிதாச்சாரத்தை மேம்படுத்தும் வகையில், கருத்தரிப்புக்கு முந்தைய மற்றும் பிரசவத்திற்கு முந்தைய நோய் கண்டறிதல் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் பேரணியில் பங்கேற்றவர்கள் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மேலும் தகுதி வாய்ந்த பட்டதாரிகளுக்கு மணப்பெண்களை மாநில அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்த ஜோதி கிராந்தி பரிசத் அமைப்பின் நிறுவனர் ரமேஷ் பாஸ்கர் கூறுகையில், ‘‘இந்த பேரணி வேடிக்கையானதாக இருக்கலாம். ஆனால் மாநிலத்தில் ஆண்- பெண் விகிதம் குறைந்திருப்பதால் இளைஞர்களுக்கு மணமகள் கிடைப்பதில்லை” என்றார்.