அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் ஆதார் இணைக்காத 'பான் கார்டு' செல்லாது – வருமான வரித்துறை

மார்ச் 31-ந்தேதி

வருமான வரி செலுத்துவதற்கான நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி வருமான வரி செலுத்துவோர் தங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்து வருகின்றனர். தற்போது இதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை நிர்ணயித்து இருக்கிறது. அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள ெபாது அறிவுறுத்தல் நோட்டீசில், ‘வருமான வரிச்சட்டம் 1961-ன்படி, விலக்கு பெறாத அனைத்து பான் கார்டுதாரர்களும் 31.3.2023-க்குள் தங்கள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும். ஆதார் இணைக்காத பான் கார்டுகள் 1.4.2023 முதல் செயலற்றதாகி விடும்’ என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், ‘இது கட்டாயம், அவசியம். தாமதிக்க வேண்டாம், இன்றே இணைக்கவும்’ என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.

விளைவுகளுக்கு பொறுப்பு

கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, அசாம், காஷ்மீர், மேகாலயா மாநிலங்களை சேர்ந்தவர்கள், வருமான வரிச்சட்டம் 1961-ன் படி வீடில்லாதவர்கள், 80 மற்றும் அதற்கு மேல் வயதுடையவர்கள், இந்தியர் அல்லாதவர்கள் போன்ற பிரிவினர் விலக்கு பெற்றவர்கள் ஆவர்.

எனவே இவர்களை தவிர மீதமுள்ளவர்கள் பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஆகும்.

அதேநேரம் ஒருவரின் பான் கார்டு செயலற்றதாகி விட்டால், வருமான வரிச்சட்டத்தின் அனைத்து விளைவுகளுக்கும் அந்த தனிநபர் பொறுப்பாவதுடன், பல சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தது.

வருமானம் செயலாக்கப்படாது

அந்தவகையில், செயல்படாத பான் எண்ணைப் பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்ய முடியாது; நிலுவையில் உள்ள வருமானம் செயலாக்கப்படாது; நிலுவையில் உள்ள பணத்தைத் திரும்பப் பெற முடியாது; குறைபாடுள்ள வருமானம் தொடர்பான நிலுவையில் உள்ள நடைமுறைகளை முடிக்க முடியாது மற்றும் அதிக விகிதத்தில் வரி கழிக்கப்பட வேண்டும்.

இவற்றைத் தவிர, அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கான முக்கியமான கே.ஒய்.சி. (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) அளவுகோல்களில் ஒன்று பான் என்பதால், வங்கிகள் மற்றும் பிற நிதி இணையதளங்கள் போன்ற பல்வேறு தளங்களிலும் வரி செலுத்துவோர் சிரமத்தை சந்திக்க நேரிடும் என்றும் வருமான வரித்துறை கூறியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.