அம்பை: கல்லிடைக்குறிச்சி அருகே மணிமுத்தாறு மலையடிவாரத்தில் உள்ள கிராம பகுதிகளில் அடிக்கடி யானை, மிளா, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி போன்ற காட்டு மிருகங்கள் அடிக்கடி காட்டில் இருந்து உணவு தேடியோ, தண்ணீருக்காகவோ அல்லது வழி தவறியோ மக்கள் வசிக்கும் பகுதியில் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவது வழக்கம், இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் காட்டில் இருந்து இறங்கி வந்த ஆண் யானை ஒன்று மலையடிவாரத்தில் உள்ள பகுதிகளில் உணவு தேடி அலைந்து திரிந்தது.
இந்த யானை இன்று காலை உலுப்படிப்பாறை பீக்கம்பள்ளம் என்னுமிடத்தில் உள்ள பனங்காட்டிற்குள் புகுந்து பனை மரத்தை வேரோடு சாய்க்க முயற்சித்தது. அப்போது எதிர்பாராத விதமாக பனை மரம் அருகே உள்ள மின்சார கம்பி மீது சாய்ந்ததில் யானை மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே யானை உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அலுவலர் நித்யா மற்றும் வனவர் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.