இந்திய ஒற்றுமை பயணம் ராகுல் யாத்திரையில் பங்கேற்க பரூக், உமர், மெகபூபா சம்மதம்: அகிலேஷ் யாதவ், மாயாவதி புறக்கணிப்பு

ஸ்ரீநகர்: ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க  பரூக், உமர் அப்துல்லா, மெகபூபா முடிவு செய்துள்ளனர். ஆனால் அகிலேஷ் யாதவ், மாயாவதி புறக்கணிக்கின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். யாத்திரை காஷ்மீரை சென்றடையும்போது அதில் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தியும் பங்கேற்க உள்ளார். இது தொடர்பாக மெகபூபா முப்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ ராகுல்காந்தியின் அடங்காத துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன். பாசிச சக்திகளுக்கு எதிராக துணிச்சலாக  சவால் விடுபவருக்கு துணை நிற்பது என் கடமை என்று நான் நினைக்கிறேன். ராகுல்காந்தியின் பயணத்தில் நான் இணைய உள்ளேன்’ என்று தெரிவித்து உள்ளார். இதே போல் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, அவரது மகன் உமர் அப்துல்லாவும் பங்கேற்க உள்ளனர். இதற்கிடையே உபியில் செல்ல உள்ள யாத்திரையில் பங்கேற்க வரும்படி அகிலேஷ்யாதவ், மாயாவதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் இருவரும் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.