ராகுல் காந்தி – கமல் உரையாடல்: "`ஹே ராம்'-இல் நான் ஏன் காந்தியைக் கொலை செய்ய நினைப்பவனாக நடித்தேன்?"

காந்தியையும், அவர் முன்னெடுத்த அரசியலையும் பற்றி, தான் கலந்துகொள்ளும் மேடைகளில் எல்லாம் பேசிவருகிறார் கமல். அந்த வகையில் அண்மையில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்டு ‘நான் காந்தியின் பேரன்’ என்று உரக்கச் சொல்லிப் பேசியிருந்தார். இதையடுத்து ராகுலும் கமலும் இணைந்து உரையாடும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில், இருவரும் நாட்டின் அரசியல் சூழல் குறித்தும் ராணுவம், நாட்டின் பாதுகாப்பு, தற்சார்பு பொருளாதாரம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, தமிழ் நாட்டின் தனித்தன்மையான அரசியல் எனப் பல்வேறு விஷயங்களைப் பற்றிக் கலந்துரையாடியிருந்தனர்.

கமல், ராகுல்காந்தி

அப்போது ‘ஹே ராம்’ பற்றியும் திரைத்துறையில் இருக்கும் வேலைவாய்ப்புகள் குறித்தும் கமல்ஹாசன் பேசியிருந்தார். “என் அப்பா காங்கிரஸ் கட்சியிலிருந்தார். காந்தியை அவருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், நான் இளம்வயதில் காந்தியைக் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். இருப்பினும் என் அப்பா என்னோடு ஏதும் வாதம் செய்யமாட்டார், வரலாற்றைப் படி என்று எனக்கு அறிவுரைச் சொல்வார். அவர் ஒரு வழக்கறிஞராக இருந்தபோதும் இது குறித்து என்னுடன் வாதம் செய்யமாட்டார். என் 24, 25 வயதுகளில் காந்தியைப் பற்றி நானாக அறிந்துகொண்டேன். பின்னர், இத்தனை வருடப் புரிதலில் அவரது ரசிகனாக மாறிவிட்டேன். இதுதான் நான். இதன் காரணமாகத்தான் ‘ஹே ராம்’ திரைப்படத்தை இயக்கியிருந்தேன். அதில் காந்தியைக் கொல்லத் திட்டமிடும் ஒரு கொலையாளிகளில் ஒருவனாக நானும் நடித்திருந்தேன்.

அத்திரைப்படத்தில் நான் அவரை (காந்தி) நெருங்கி நெருங்கி உண்மைக்கு அருகில் செல்ல செல்ல மொத்தமாக மாறிவிடுவேன். ஆனால் அது தாமதமான மாற்றம். எனவே அவன் செய்ய நினைத்ததை வேறொருவன் செய்துவிடுகிறான். இருப்பினும் காந்தியைத் தவறாக நினைத்த எனது கதாபாத்திரம் மனம் மாறிவிடுகிறது. அதுதான் ‘ஹே ராம்’ படத்தின் கதை” என்றார். அதைக் கேட்ட ராகுலும் “காந்தியைப் புரிந்துகொள்ள நீங்கள் கையாண்ட இந்த யுக்தி அற்புதமானது” என்று பெருமைப்பட்டார்.

கமல்

மேலும் வேலைவாய்ப்புகள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என இருவரும் உரையாடினர். அப்போது திரைத்துறையில் இருக்கும் வேலைவாய்ப்புகள் பற்றிப் பேசிய கமல், “ஒரு திரைப்படத்தின் மூலம் 200 பேருக்கு வேலை கிடைக்கும். ஆனால் அதற்கான பயிற்சி மையங்கள் மிகக்குறைவு. அதற்கென ஒரு ஐடிஐ கூட இங்கு இல்லை” என்று வருத்தத்துடன் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.