நம்பர் பிளேட் இல்லாமல் டி.டி.எஃப். வாசன் பயணம் செய்து வந்த சொகுசு கார் பறிமுதல்!

சென்னையில் திரைப்பட முன்னோட்ட காட்சியில் பங்கேற்பதற்காக வந்த யூடியூப் பிரபலம் டி.டி.எஃப். வாசன் பயணம் செய்து வந்த சொகுசு கார் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் ‘காலேஜ் ரோடு’ என்ற திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி இன்று காலை 10.30 மணியளவில் திரையிடப்பட்டது. திரைப்படத்தை விளம்பரம் படுத்தும் விதமாக யூடியூப் பிரபலம் டிடிஎஃப் வாசன் என்பவரை படக்குழுவினர் வர வைத்துள்ளனர். இதன் காரணமாக காலை 11.30 மணி அளவில் கமலா திரையரங்கிற்கு டிடிஎஃப் வாசன் எஸ்யூவி சொகுசு காரில் வந்து உள்ளார். அப்பொழுது டிடிஎஃப் வாசன் வந்த காரில் பதிவு எண் எதுவும் இல்லாமல் இருந்துள்ளது. இதைக் கண்ட வடபழனி போக்குவரத்து போலீசார், டிடிஎஃப் வாசன் பயணம் செய்து வந்த காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் டிடிஎஃப் வாசன் வந்த காரை ஓட்டி வந்தவர் அவரது நண்பர் பிரவீன் குமார் (வயது 23) என்பதும், மேலும் அந்த கார் பிரவீன் குமாரின் பெரியப்பா மகன் ஆன கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஹேமச்சந்திரன் (வயது 26) என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இந்த சொகுசு வாகனம் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் வாங்கப்பட்டு, இதுவரை பதிவு எண் ஒட்டப்படாமல் டிடிஎஃப் வாசன், நண்பன் பிரவீன் கடந்த மூன்று மாதங்களாக இந்த வாகனத்தை பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது.
image
இதனை அடுத்து பதிவு எண் ஓட்டப்படாததால் டிடிஎஃப் வாசன் பயணம் செய்து வந்த காரை வடபழனி போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து வேறொரு வாகனம் மூலம் சென்னை வடபழனி கமலா திரையரங்கிற்கு அவர் புறப்பட்டார். மேலும் காவல்துறை தரப்பில் புதிதாக வாங்கிய கார் என்பதால் நம்பர் பிளேட் இல்லை என்றாலும், for registration என்கின்ற பலகை வைத்திருக்க வேண்டும், அது இல்லாத காரணத்தினால் ரூபாய் 500 அபராதமாக விதிக்கப்பட்டு வாகனத்தை பறிமுதல் செய்வதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.