நீங்க ஆட்சியை பிடித்ததே இப்படித்தான்: மறந்து போச்சா அண்ணாமலை?

தமிழ்நாடு பாஜகவில் கடந்த சில மாதங்களாக உட்கட்சி பூசல் அதிகளவில் வெளிப்பட்டு வருகிறது. குறிப்பாக, பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை மீது கட்சியில் இருப்பவர்களே சில குற்றச்சாடுகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவில் இணைந்த காயத்ரி ரகுராம், அண்ணாமலை மீது கடும் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன் வைத்து பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மேலும், அண்ணமலை தலைமையில் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பகிரங்க குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார். இந்த நிலையில், பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தெரிவித்த கருத்துக்கள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல், செய்தியாளர்களை ஒருமையில் பேசி, சிவாஜி படத்தில் வருவது போன்று ஆபீஸ் ரூம் வாங்க என்று மிரட்டும் தொனியில் பேசி கடுமையான வாக்குவாதத்தில் அண்ணாமலை ஈடுபட்டார்.

மேலும், “உங்க சேனல் பெயரையும் உங்கள் பெயரையும் சொல்லுங்கள்; கட்சி சேனல் நடத்துபவர்களிடம் பேச விரும்பவில்லை; டிஜிட்டல் மீடியாவுக்கு லைக் வேண்டும்; நான்கு ட்வீட் போட வேண்டும்; யூ-டியூப் சேனல்காரர்கள் கேள்வி கேட்க உரிமையில்லை; சின்ன கேமிரா 40 ஆயிரம் ரூபாய் கேமிரா வாங்கிட்டு வந்து ப்ரஸ் மீட்ல உட்கார வேண்டியது; என்னுடைய செய்தியாளர் சந்திப்பிற்கு யூ-டியூப் சேனல் செய்தியாளர்கள் வர வேண்டாம்” என கடுமையான வார்த்தைகளில் பேசினார்.

அத்துடன், தனது ஐந்து லட்ச ரூபாய் ரஃபேல் வாட்ச்சில் Bug பண்ணும் டிவைஸ் உள்ளதா என்று கண்டறிந்து சொல்லுங்கள் என்று தனது வாட்சை கழற்றி கொடுத்து சீன் போட்ட பாஜக தலைவர் அண்ணாமலை, இறுதி வரை அவர் கூறிய புகார்களுக்கு எந்த ஆதாரத்தையும் வெளியிடவும் இல்லை; வாட்ச்சுக்கான பில்லையும் தரவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. பிஜிஆர் ஊழல் பற்றிய கேள்விக்கு ஆபீஸ் ரூம் வருமாறு செய்தியாளரை மிரட்டிய அண்ணாமலை, சிட்டிங் அமைச்சரின் செக்ஸ் டேப் குறித்து அவர் சொன்ன ஆதரத்தை கேட்டபோது, எந்த சேனல் என்று கூறி நழுவி விட்டார்.

செய்தியாளர் சந்திப்பின் இறுதியில் தான் மிகவும் தைரியமானவர் என்று அண்ணாமலை குறிப்பிட்டார். ஆனால், அவர் மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டார். என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் படபடவென தேவையில்லாத அனைத்தையும் பேசினார். அதாவது பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக் என்பது போல அவரது தைரியம் இருந்ததாக நெட்டிசன்கள் கிண்டலடிக்கின்றனர்.

யூ-டியூப் சேனலுக்கு கேள்வி கேட்க உரிமை இல்லை என்கிறார் அண்ணாமலை. ஆனால், யூ-டியூப் சேனல்கள் உள்ளிட்ட டிஜிட்டல் மீடியாக்களை நெறிமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய பாஜக அரசுக்குத்தான் இருக்கிறது என்பதை அண்ணாமலை மறந்து விட்டர் போல என்கிறார்கள். அதேபோல், 2014ஆம் ஆண்டில் பாஜக மத்தியில் ஆட்சியை பிடிக்க பெரிதும் துணை புரிந்தவை எந்த வரண்முறையும் இல்லாத சமூக ஊடகங்களும்; டிஜிட்டல் ஊடகங்களும், அதன் நான்கு ட்வீட்களுக்கு விழுந்த லைக்குகளும் என்பதையும் அண்ணாமலைக்கு நியாபகப்படுத்த வேண்டும் என்கின்றனர் சமூக வலைதளத்தில் களமாடுபவர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.