சாதியை குறிப்பிட்டு தகாத வார்த்தைகளால் தகராறு? பாஜக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கைது!

விவசாயியின் சாதி பெயரை கூறி தரக்குறைவாக திட்டியதாக பாஜக ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மயிலாடும்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவருக்கு மயிலாடும்பாறை கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் உள்ளது. இவரது விவசாய நிலத்திற்கு அருகே சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக ராஜா, முருங்கை விவசாயம் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.
image
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாடும்பாறை ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அன்பில் சுந்தரபாரதம், புறம்போக்கு நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்ய வேண்டுமானால் தனக்கு 1 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என ராஜாவிடம் கேட்டுள்ளார். ஆனால், ராஜா பணம் தர மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அன்பில் சுந்தரபாரதம் அத்துமீறி ராஜாவின் தோட்டத்திற்குச் சென்று விவசாய நிலத்தில் இருந்த 25-க்கும் மேற்பட்ட முருங்கை மரங்களை ஜேசிபி வாகனம் மூலம் அப்புறப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து ராஜா அதை தடுக்க முயன்றுள்ளார். அப்போது அன்பில் சுந்தரபாரதம், ராஜாவை தரக்குறைவான வார்த்தைகளாலும், ராஜாவின் சாதிய அடையாளத்தை குறிப்பிட்டும் உடன் சில தகாத வார்த்தைகளை கூறி திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராஜா, அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
image
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ராஜா அளித்த புகாரின் பேரில் அன்பில் சுந்தர பாரதத்தின் மீது கடமலைக்குண்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.