“ஆளுநர் பொழுதுபோகாமல் எதையாவது பேசிக்கொண்டிருக்கிறார்” – சீமான்

சென்னை: “ஆளுநர் தான் சாப்பிடுகிற உணவு, வாங்கும் சம்பளம், பெரிய இடத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதால், ஏதாவது பேச வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறார். பொழுதுபோகாமல் அவர் பேசிக்கொண்டிருப்பதை இந்த காதில் வாங்கி, அந்த காதில் விட்டுவிட்டுப் போக வேண்டியதுதான்” என்று நாம் தமழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சனிக்கிழமை (ஜன.7) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், தமிழக ஆளுநர் தமிழ்நாடு எனக் கூறுவதைவிட, தமிழகம் என்று அழைப்பதே சரியாக இருக்கும் என்று பேசியிருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஆளுநருக்கு சரியாக இருக்கும். சுப்ரமணியசாமி ஐயாவுக்கு சரியாக இருக்கும்.

பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்கு முன்னாடி, திருநெல்வேலியில் கல்வெட்டு இருக்கிறது. பக்தவச்சலம் ஐயா இருந்தபோது வைக்கப்பட்ட அந்த கல்வெட்டில் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் என்றுதான் இருக்கிறது. தாத்தா ரெட்டைமலை சீனிவாசன், 1926-களில் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளார்.

இவர்கள் தமிழகம் என்று சொல்லிக் கொள்ள வேண்டியதுதான். எங்கள் நாடு தமிழ்நாடு. இஷ்டம் இருந்தால் இரு, இல்லையென்றால் ஓடு. எனவே தேவையில்லாதவற்றை பேசிக்கொண்டிருக்கக் கூடாது.

என்ன கொடுமை என்றால், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமி, முதல்வராக இருந்தபோது கடிதத்தாள்களில் தமிழ்நாடு முதலமைச்சர் என்று பயன்படுத்தினார். ஆனால், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்து, இப்போது முதல்வராக இருக்கக்கூடிய முதல்வர் ஸ்டாலின் தமிழகம் என்றுதான் பயன்படுத்துகிறார். ஆனால் ரெண்டுமே தவறு.

தமிழ்நாடு முதலமைச்சர் என்றால் சகாயம் ஐஏஎஸ், இறையன்பு ஐஏஎஸ் என்பது போன்றது. தமிழ்நாடு முதலமைச்சராக மாறிவிட்டதா? சரியாக அந்தப்பொருள் வரவேண்டும் என்றால், தமிழ்நாட்டு முதலமைச்சர் என்றுதான் இருக்க வேண்டும். எனவே தமிழ்நாடு முதலமைச்சர் என்றால், தமிழ்நாடு முதலமைச்சராகி விட்டது போன்ற பொருளைத் தரும். எனவே அதை மாற்றி தமிழ்நாட்டு முதலமைச்சர் என்று சொல்ல வேண்டும்.

ஆளுநர், தான் சாப்பிடுகிற உணவு, வாங்கும் சம்பளம், பெரிய இடத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதால், ஏதாவது பேச வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறார். பொழுதுபோகாமல் அவர் பேசிக்கொண்டிருப்பதை இந்த காதில் வாங்கி, அந்த காதில் விட்டுவிட்டுப் போக வேண்டியதுதான். அவர்களுக்கு ஒரு வேலையும் இல்லை. நமக்கு கோடி வேலை இருக்கிறது” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.