மரகதமணியுடன் சாதாரணமாக நிகழ்ந்த சந்திப்பு : சிலிர்க்கும் வினீத் சீனிவாசன்

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான படம் ஆர்ஆர்ஆர். இதில் இடம் பெற்ற நாட்டுக்கூத்து பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது தான் இரு தினங்களாக திரும்பிய பக்கம் எல்லாம் பேச்சாக இருக்கிறது. தென்னிந்தியாவை தாண்டி பாலிவுட்டில் இருந்தும் கூட படக்குழுவினருக்கும் இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கீரவாணிக்கு (மரகதமணி) பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் நடிகர் வினீத் சீனிவாசன் படக்குழுவினருக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளதுடன் இசையமைப்பாளர் மரகதமணியை தான் முதன் முதலாக சந்தித்த அனுபவம் குறித்தும் சிலிர்ப்புடன் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “சில வருடங்களுக்கு முன் நான் தங்கி இருக்கும் எதிர் பிளாட்டில் ஒரு நடுத்தர வயது கணவன் மனைவி வசித்தனர். கணவர் மலையாளி, மனைவி ஆந்திராவை சேர்ந்தவர். அவர்களுடன் நட்பு ரீதியாக பழகி வந்தேன். ஒருநாள் நான் வெளியே சென்று விட்டு காரில் எனது அபார்ட்மெண்டுக்கு திரும்பியபோது பார்க்கிங் பகுதியில் எதிர் பிளாட் பெண்மணியுடன் இன்னொரு நடுத்தர வயது நபர் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். என்னை பார்த்த அந்த பெண்மணி அருகில் அழைத்து அந்த புதிய நபரை தனது சகோதரர் என அறிமுகப்படுத்தி, இவர் தெலுங்கு திரையுலகில் இசையமைப்பாளராக இருக்கிறார் பெயர் மரகதமணி என்று கூறியதும் நான் திகைத்துப் போனேன். அதற்கு முன்பாக அவரது பெயரையும் புகழையும் குறித்து நான் கேள்விப்பட்டிருந்தாலும் அவர் முகம் எனக்கு சரியாக நினைவில் இல்லை. அப்படிப்பட்ட ஒரு ஜாம்பவானை அன்று சந்தித்ததை மிகப் பெரிய அதிர்ஷ்ட நாளாக கருதினேன். இன்று அவர் கோல்டன் குளோப் விருது வென்றுள்ளார். அவருக்கு என் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் வினித் சீனிவாசன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.