புதுடெல்லி: டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோதியாவின் அலுவலகம் உள்பட அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று (சனிக்கிழமை) சோதனை நடத்தினர்.
டெல்லியில் மதுபானக் கொள்கை திரும்பப் பெறப்பட்ட விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் மணிஷ் சிசோதியா உள்பட 15 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மணிஷ் சிசோதியாவின் தனிப்பட்ட உதவியாளரும் சிக்கிய நிலையில், அவரிடம் அமலாக்கத் துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த, விவகாரத்தை அடுத்து டெல்லியில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி கட்சிக்கும் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி தலைமைச் செயலகத்தில் உள்ள மணிஷ் சிசோதியாவின் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மணிஷ் சிசோதியா, ”சிபிஐ அதிகாரிகள் இன்று மீண்டும் எனது அலுவலகம் வந்தார்கள். நான் அவர்களை வரவேற்றேன். அவர்கள் எனது வீடு, அலுவலகம், எனது லாக்கர் ஆகியவற்றை சோதனையிட்டனர்.
கிராமத்தில் உள்ள எனது வீட்டிற்கும் சென்று சோதனையிட்டுள்ளனர். எனக்கு எதிராக எதையும் அவர்கள் கண்டெடுக்கவில்லை. ஏனெனில், நான் எவ்வித தவறும் செய்யவில்லை. கல்வி அமைச்சர் என்ற முறையில் டெல்லியில் உள்ள குழந்தைகளின் கல்விக்காக உண்மையாக பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.