
இமாச்சல பிரதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் சர்மா திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வடோதராவில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டியில் பரோடா – இமாச்சல பிரதேச அணிகள் மோதின. அந்த போட்டியில் சித்தார்த் சர்மாவும் இடம்பெற்றிருந்தார்.
போட்டி தொடங்குவதற்கு முன்பாக அவருக்கு வாந்தி, சிறுநீர் கழிப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து அவர் வடோதராவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சில நாட்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சித்தார்த்தின் பெற்றோர் மற்றும் சகோதரர் கனடாவில் உள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பையை இமாச்சல பிரதேச அணி கைப்பற்றியது. இந்த போட்டியில் இமாச்ச பிரதேச அணியில் சித்தார்த் சர்மா இடம்பெற்று சிறப்பாக விளையாடினார்.
6 முதல்தர போட்டிகளிலும், 6 ஏ பிரிவு போட்டிகளிலும், ஒரு டி20 போட்டியிலும் இமாச்சல பிரதேச அணிக்காக சித்தார்த் சர்மா விளையாடி 33 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
சித்தார்த் சர்மாவின் உயிரிழப்புக்கு இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், அவரது இழப்பை தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தினருக்கு இறைவன் தருவானாக என்று கூறியுள்ளார்.
newstm.in