ஹைதராபாத்தில், உணவு டெலிவரி செய்யும்போது நாய் கடிக்க வந்ததால் தப்பிப்பதற்காக மூன்றாவது மாடியிலிருந்து குதித்த 23 வயது உணவு டெலிவரி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியான தகவலின்படி, உயிரிழந்த உணவு டெலிவரி ஊழியர், யூசப்கூடா பகுதியிலுள்ள ராம்நகரைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் என்று தெரியவந்திருக்கிறது.

இவர் கடந்த புதன்கிழமை (ஜனவரி 11) இரவு, பஞ்சாரா ஹில்ஸிலுள்ள லும்பினி ராக் கேஸ்டல் (Lumbini Rock Castle) அடுக்குமாடி கட்டடத்தின் மூன்றாவது மாடிக்கு உணவு டெலிவரி செய்யச் சென்றிருக்கிறார். அப்போது வாடிக்கையாளரின் வீட்டுக்கதவைத் தட்டியபோது, வீட்டினுள்ளிருந்து ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்று குரைத்தபடியே அவரை நோக்கி வந்திருக்கிறது. அதனால், ரிஸ்வான் பயத்தில் அங்கிருந்து கீழே குதிக்க அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸை அழைக்க, ரிஸ்வான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, அடுத்தநாள் உணவு ஆர்டர் செய்த ஷோபனா என்ற பெண்மீது ரிஸ்வானின் சகோதரர் முகமது காஜா போலீஸில் புகாரளித்தார். போலீஸாரும் புகாரின் அடிப்படையில் ஷோபனா மீது பிரிவு 336 (மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் சட்டம்) கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ரிஸ்வான் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பெரும் சோகத்துக்குள்ளான முகமது காஜா, “என்னுடைய சகோதரர் இப்போது இல்லை. எங்களுக்கு நீதி வேண்டும்” என்று உள்ளூர் எம்.எல்.ஏ, காவல் உதவி ஆணையரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.