அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் ஆளுநர்: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

தமிழ்நாடு ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் சட்டமன்றத்தில் நடந்து கொண்ட விதமும், தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைத்தால் போதும் என்று பேசிவருவதும் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆர்.எஸ்.எஸ் கருத்தியலை தமிழ்நாட்டில் திணிக்கும் விதமாக, சனாதன தர்மத்தை தூக்கிப் பிடிக்கும் விதமாக ஆளுநர் செயல்படுகிறார் என்ற பேச்சு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக டெல்லிக்கு மாறி மாறி பயணம் மேற்கொண்டு வருகிறார்.

பொங்கல் திருவிழாவுக்கான அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் முத்திரையை தவிர்த்து ஒன்றிய அரசின் முத்திரையை பயன்படுத்தியிருந்தது சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலையும் எதிர்ப்பு தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் முத்திரையை பயன்படுத்தாமல் தவிர்த்தது தவறு என்று கூறினார்.

திமுகவை பல்வேறு விவகாரங்களில் எதிர்த்து வரும் அண்ணாமலை, தமிழ்நாடு அரசு முத்திரையில் ஆளுநர் செய்தது தவறு என்று கூறியது தவறு என்றது கவனம் பெற்றது.

திமுகவை எதிர்க்கும் மற்றொரு கட்சியான அமமுகவும் ஆளுநரை ‘தமிழ்நாடு’ விவகாரத்தில் கண்டித்துள்ளது. எம்.ஜி.ஆரின் 106 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள எம்ஜிஆர் திரு உருவச் சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (ஜனவரி 17 ) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” இபிஎஸ், ஓபிஎஸ் பதவி சண்டையால் அதிமுக யாருக்கு என்பது நீதிமன்றத்தில் வழக்காக உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் கூட்டணி குறித்த முடிவை அமமுக எடுக்கும். தமிழ்நாடு ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார். தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்ல வேண்டும் என ஆளுநர் தேவையில்லாமல் அரசியல் பேசுகிறார்” என்று அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.