5 நாட்களில் அபாரம் பொங்கலுக்காக உழவர் சந்தைகளில் 433.57 டன் காய்கறி விற்பனை-விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லை : தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 உழவர் சந்தைகளில் மட்டும் 5 நாட்களில் 433.57 டன் காய்கறிகள் விற்பனையாகின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தைப்பொங்கல் பண்டிகை கடந்த 15ம் தேதி கொண்டாடப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் குறைந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு மக்கள் தைப்பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் பண்டிகையை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர்.

பொங்கல் பண்டிகைக்காக நெல்லை மாவட்டம் பாளை மகாராஜநகர் உழவர் சந்தை, பெருமாள்புரம் புதிய உழவர் சந்தை, டவுன் கண்டியப்பேரி உழவர் சந்தை, மேலப்பாளையம் உழவர் சந்தை, அம்பை உழவர் சந்தை ஆகிய 5 உழவர் சந்தைகளுக்கு கடந்த 11ம் தேதியில் இருந்து அதிகளவில் காய்கறிகள் வரத்தும் விற்பனையும் இருந்தது.

தலைப்பொங்கல் பண்டிகை கொண்டாடுபவர்கள் 11ம் தேதி முதலே காய்கறிகளை வாங்கிச் சென்றனர். மற்ற வெளிச்சந்தைகளைவிட உழவர் சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விலையில் காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் விற்பனை 5 நாட்கள் களை கட்டியது. வழக்கமாக சாதாரண நாட்களில் 15 முதல் 20 டன் அளவில் காய்கறிகள் விற்பனையாகும் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனை பல மடங்கு உயர்ந்தது. 5 உழவர்சந்தைகளிலும் சேர்த்து கடந்த 11ம் தேதி மட்டும் 69.99 டன் அளவிற்கு காய்கறிகள் விற்பனையானது.

 12ம் தேதி இது 84.98 டன்னாக உயர்ந்தது. 13ம் தேதி 120.37 டன் காய்கறிகள் விற்பனையாகின. பொங்கல் பண்டிகையின் உச்ச காய்கறி விற்பனை அளவு 14ம் தேதி (பொங்கலுக்கு முதல்நாள்) சனிக்கிழமை 131.54 டன்னாக உயர்ந்தது. பொங்கல் பண்டிகை நாளிலும் 26.69 டன் அளவிற்கு காய்கறிகள் விற்கப்பட்டன. 5 நாட்களும் சேர்த்து மொத்தம் 433.57 டன் எடை அளவில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் விற்று தீர்ந்தன.  வழக்கம் போல் இந்த ஆண்டும் முருங்கை, வெள்ளை கத்தரி, மாங்காய் போன்ற சில காய்கறிகளுக்கு தட்டுப்பாடு இருந்தது. இதனால் இவற்றின் விலை உயர்ந்து காணப்பட்டது.  நேரடி வியாபாரம் மூலம் பலன் அடைந்ததால் இங்கு விற்பனை செய்த நெல்லை மற்றும் அருகே உள்ள மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ரூ.1 கோடியே 76 லட்சம் மதிப்பு

நெல்லை மாவட்டத்தில் 5 உழவர் சந்தைகளிலும் 5 நாட்களில் விற்பனையான காய்கறிகளின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 76 லட்சத்து 70 ஆயிரத்து 430 ஆகும். இதில் அதிகபட்சமாக பாளை மகாராஜநகர் உழவர் சந்தையில் மட்டும் ரூ.89 லட்சத்து 18 ஆயிரத்து 540 மதிப்பிலான காய்கறிகள் விற்பனையாகியுள்ளன. இதற்கு அடுத்தபடியாக மேலப்பாளையம் உழவர் சந்தையில் ரூ.40 லட்சத்து 11 ஆயிரத்து 450க்கு காய்கறிகள் விற்பனையானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.