வாஷிங்டன்: சிறுநீரில் இருந்து வெளிப்படும் வாடை வாயிலாக, புற்றுநோயை கண்டறியும் திறன் எறும்புகளுக்கு உள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக, அமெரிக்க நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பவரின் சிறுநீர் மற்றும் வியர்வையை மோப்பம் பிடித்து நோயை கண்டறியும் திறன் நாய்களுக்கு உள்ளதாக ஏற்கனவே பல்வேறு ஆய்வுகளில் நிரூபணமாகி உள்ளது.
இந்த வகையில், எறும்புகளுக்கும் இந்த திறன் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். புற்றுநோய் கட்டிகளில், ‘வொலட்டைல் ஆர்கானிக் காம்ப்பவுண்ட்’ என்ற கரிமக் கலவை காணப்படும். இந்த கலவையின் வாடை, நோயால் பாதிக்கப்பட்டவரின் வியர்வை மற்றும் சிறுநீரில் வெளிப்படும்’ என, ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கரிம கலவையின் வாடையை கண்டறியும் சக்தி எறும்புகளுக்கு உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான ஆய்வின் போது, மார்பக புற்றுநோய் கட்டியின் சிறிய பகுதிகளை எலிகளின் உடலில் வைத்து ஆய்வாளர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். பின், புற்றுநோய் உள்ள எலிகள் மற்றும் நோய் இல்லாத எலிகளின் சிறுநீரில், 35 எறும்புகளை விட்டனர். இதில், புற்றுநோய் உள்ள எலிகளின் சிறுநீரை எறும்புகள் சரியாக கண்டறிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
புற்றுநோய் உள்ள சிறுநீரில் எறும்புகள் அதிக நேரம் செலவிடும் விதமாக அவற்றுக்கு பயிற்சி அளித்துள்ளனர். இதுபேன்ற பயிற்சிகளில் தேர்ச்சி பெற நாய்கள் ஆறு மாதங்கள் எடுத்துக் கொள்வதாகவும், எறும்புகள் மூன்று சுற்றுக்களாக 10 நிமிடங்கள் பயிற்சி அளித்தாலே தேர்ச்சி பெறுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எலிகளின் உடலில் உள்ள புற்றுநோயை அதன் சிறுநீர் வாயிலாக கண்டறிந்ததை போல, மனிதர்களின் சிறுநீரில் இருந்தும் எறும்புகளால் நோயை கண்டறிய முடிகிறதா என்ற ஆய்வில் தற்போது விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வு குறித்து அமெரிக்காவின், ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement