பணிக்கொடை வரம்பு: ரூ.20 லட்சத்துக்கும் அதிகமாக உயர்த்தப்படுமா?

பழைய பென்ஷன் திட்டம் சார்ந்தவர்கள், என்.பி.எஸ். திட்ட ஊழியர்கள் இ.பி.எஸ். திட்ட ஊழியர்கள், இ.பி.எஃப் அமைப்பின் கீழான ஊழியர்கள், இ.பி.எஃப். சாராத பிறதுறை ஊழியர்கள் என பெருபான்மை சம்பளதாரருக்கும் ஓய்வு பெற்றவுடன் கணிசமான ஒரு தொகையை வழங்குவது பணிக்கொடைதான்.

பணிக்கொடை

கடந்த காலத்தில் பணிக்கொடை உச்சவரம்ப் எவ்வளவு என்று பார்ப்போம்.

01.01.1973 முதல் ரூ.24,000

01.10.1979 முதல் ரூ.30,000

31.05.1982 முதல் ரூ.36,000

01.10.1984 முதல் ரூ.50,000

14.12.1987 முதல் ரூ.1,00,000

01.04.1995 முதல் ரூ.2,50,000

1.01.1996 முதல் ரூ.3,50,000

01.01.2006 முதல் ரூ.10,00,000

7-வது சம்பள கமிஷன்…

6-வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி ரூ.10 லட்சமாக இருந்துவந்த பணிக்கொடை வரம்பை ரூ.20 லட்சமாக பரிந்துரைத்தது 7-வது சம்பள கமிஷன். அதாவது, 50ஆண்டுகளுக்கு முந்தைய பணிக்கொடை வரம்பைப் போல் 83 மடங்கு. ஆனால், சம்பள நிலைகள் 120 மடங்கும் அதற்கு அதிகமாகவும் ஆகிவிட்டது.

துணைப் பரிந்துரை..

பணிக்கொடை வரம்பை ரூ.20 லட்சமாக உயர்த்தி பரிந்துரை செய்த 7வது சம்பள கமிஷன், அகவிலைப்படி உயர்வு 50 சதவிகித்தைத் தாண்டுமானால் பணிக்கொடை உச்சவரம்பை 25% உயர்த்திக் கொள்ளவும் பரிந்துரை செய்திருந்தது. அதாவது, சம்பளத்துடன் தரப்படும் அகவிலைப்படி 50% என்ற நிலையைத் தாண்டினால், பணிக்கொடை வரம்பு ரூ.25 லட்சம் ஆகும் என்பதே பரிந்துரை. இதன்படி, விரைவில் அகவிலைப்படி உயரும் அதை தொடர்ந்து பணிக்கொடை வரம்பும் உயரும் என சம்பளதாரர்கள் பலரும் எதிர்பார்த்து இருக்கக்கூடும்.

நிதானமான உயர்வு

கடந்த 6-வது சம்பள கமிஷன் 2006-ல் அமலாக்கம் பெற்றது. அதிலிருந்து ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில் அதாவது, 01.01.2013-ல் அகவிலைப்படி 80 சதவிகிதமாக உயர்ந்தது. இதே போல, நடப்பு சம்பள கமிஷனிலும் அகவிலைப்படி உயரும். பணிக்கொடை வரம்பும் அதிகமாகும் என்ற எதிர்பார்ப்பு ஊழியர்களிடையே இருந்தது. ஆனால், 7-வது சம்பள கமிஷனின் 7-வது ஆண்டில் அதாவது, 01.01.2023-ல் எதிர்பார்க்கப்படும் அகவிலைப்படி 42% மட்டுமே. எனவே, பணிக்கொடை வரம்பு அதிகரிக்க தற்போது வாய்ப்பு இல்லை.

அடுத்த சம்பள கமிஷன்…

8-வது சம்பள கமிஷன் அமலாக்கம் பெறுமானால் அதன் அமலாக்கம் 01.01.2026-ஆக இருக்கும். அப்படிப் பார்க்கும்போது, இன்னும் ஆறு தவணை அகவிலைப்படி மட்டுமே ஏழாவது சம்பள கமிஷனில் எஞ்சி இருக்கிறது. அதற்குள் அகவிலைப்படி 50% என்ற நிலையை எட்டக்கூடும். எனவே, அடுத்த சம்பள கமிஷனுக்கு முன்னதாகவே பணிக்கொடை 25 லட்சம் என்ற வரம்புக்கு உயரும். எதிர்வரும் சம்பள கமிஷனில் உயர்த்தப்படக்கூடும். ஆனால், பணிக்கொடை வரம்பு உயர்வு உடனடித் தேவை என்பதற்குக்கீழ் கண்டவாறு உள்ளது கடந்த கால உச்சவரம்பு.

பணிக்கொடை – ஓர் ஒப்பீடு

3-வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, அமலாக்கம் பெற்ற சம்பள ஏற்ற முறையில் (Pay Scales) அதிகபட்ச சம்பளம் ரூ.3,500. பணிக்கொடை வரம்பு ரூ.50,000 ( அதாவது, அதிகபட்ச சம்பளத்தைப் போல் 14.285 மடங்கு).

4-வது சம்பள கமிஷனில் சம்பள ஏற்றமுறைப்படி அதிகபட்ச சம்பளம் ரூ.8000. பணிக்கொடை வரம்பு ரூ.1,00,000 (அதாவது, அதிகபட்ச சம்பளத்தைப் போல் 12.5 மடங்கு)

7-வது சம்பள கமிஷன் அமலாக்கம்… ரொக்கப் பலன்பெறும் மூத்த குடிமக்கள்!

5-வது சம்பள கமிஷனில் சம்பள ஏற்ற முறையில் அதிகபட்ச சம்பளம் ரூ.26,000. பணிக்கொடை வரம்பு ரூ.3.5 லட்சம். (அதாவது, அதிகபட்ச சம்பளத்தைபோல் 13.46 மடங்கு)

6-வது சம்பள கமிஷனில் சம்பள ஏற்றமுறையில் அதிகபட்ச சம்பளம் (67,000+10000) ரூ.77,000. பணிக்கொடை வரம்பு 10 லட்சம் (அதாவது அதிகபட்ச சம்பளத்தைபோல் 12.98 மடங்கு)

7-வது சம்பள கமிஷனில் அதிகபட்ச சம்பளம் 2.5 லட்சம். பணிக்கொடை வரம்பு ரூ.20 லட்சம் (அதாவது, அதிகபட்ச சம்பளத்தைப் போல் 8 மடங்கு). எனவே, விலைவாசியும், பணவீக்கமும் சம்பள கமிஷனுக்கு முன்பே பணிக்கொடை வரம்பு உயர்வை எதிர்நோக்குகின்றன.

இழப்பு என்ன?

பணிக்கொடைக்கான கணக்கீடு அடிப்படைச் சம்பளம் + அகவிலைப்படி. அதிகபட்ச பணிக்கொடை 16.5 மாத சம்பளம். இதன்படி, ஒரு லட்சம் ரூபாயை அடிப்படைச் சம்பளமாக பெறுபவர் தனது அதிகபட்ச பணிக்கொடையாக ரூ.22,77,000 பெறலாம். ஆனால், வரம்புக்கு உட்பட்டுவிடும் தொகை ரூ. 20 லட்சம்தான் கிடைக்கும். அதாவது, 87,800 வரையான சம்பளத்துக்கு மட்டுமே வரம்பைத் தாண்டாமல் முழுமையான பணிக்கொடை கிடைக்கும். பணி ஓய்வு பெறும் மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்றவர்களே ஓய்வு பெறும்போது ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான அடிப்படை சம்பளம் பெறுபவர்களாக உள்ளனர். அதாவது, ஓய்வு பெறும்போது அடிப்படை சம்பளம் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக பெறுவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

பணியிடை இறப்பு

பணியில் உள்ளபோது இறந்துபோகும் ஊழியர்களின் குடும்பத்துக்கு (அவர்கள் 20 வருட பணியை நிறைவு செய்திருந்தால் ) 33 மாத சம்பளம் பணிக்கொடையாகப் பெற விதி உள்ளது. ஆனால், அதிகபட்சமாக ரூ.43,900 அளவுக்கு அடிப்படை சம்பளம் பெற்ற நிலையில் ஊழியர் இறந்துபோகும் பட்சத்தில், குடும்பத்திற்கு 33 மாத சம்பளத்தை பணிக்கொடையாக 20 லட்சம் பெறலாம்.

43,900 -க்கு மேல் அடிப்படை சம்பளம் எவ்வளவு பெற்றிருந்தாலும் பணிக்கொடை உச்ச வரம்புக்கு உட்பட்டுவிடும். எனவே, ரூ.20 லட்சம் மட்டுமே கிடைக்கும். நடுநிலையான அரசுப்பணியில் 20 ஆண்டு பணி நிறைவு செய்த ஒருவரின் சம்பளம்கூட ரூ.80,000 அளவுக்கு இருக்கக்கூடும் என்பது தற்போதைய சராசரி கணக்கீடு. ஆனால், பெறக்கூடிய பணிக்கொடை ரூ.43,900-க்கு உட்பட்ட சம்பளம் + அகவிலைப்படிக்கு மட்டுமே, காரணம் 20 லட்சம் ரூபாயாக உள்ள பணிக்கொடை வரம்புதான்.

பயனடையப் போகிறவர்கள் யார்?

பணிக்கொடைக்கான உச்சவரம்பு உயர்த்தப்படும் பட்சத்தில் மத்திய அரசு மற்றும் மத்திய அரசின் வாரியங்கள், அஞ்சல்துறை தன்னாட்சி அமைப்புகள், நிறுவன ஊழியர்கள் பயன் பெறுவர். இதேபோல், தமிழக அரசு மற்றும் தமிழக அரசின் வாரியங்கள், நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் பயன் பெறுவார்.

Income tax

இ.பி.எப். ஊழியர்கள்…

பணிக்கொடை சட்டம் 1952-ன் கீழ் ஒய்வுக்கால பணப்பலன் பெறும். இ.பி.எப். அமைப்பு சார்ந்த ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பயன் பெறக்கூடும்.

வருமான வரி…

பணிக்கொடை வரம்பு எவ்வளவு உயர்த்தப்பட்டாலும் அரசு ஊழியர்களுக்கு வரிச்சுமை ஏற்படாது. ஏனெனில், அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை, பணிக்கொடை தொகை (Exempted Income) வருமானம் என்ற வகைப்பாட்டிலிருந்து விலக்கு பெற்றது. எனவே, வருமானக் கணக்கில் சேராது. வரி செலுத்த வேண்டிய தேவை இருக்காது.

இதர ஊழியர்களுக்கு என்ன கிடைக்கும்?

பெரும்பான்மை இதர ஊழியர்களுக்கும் ரூ.20 லட்சம் வரையான பணிக்கொடை தொகை தற்போது வரி விலக்கு பெற்றுள்ளது. இதே போன்று வரம்பு உயர்த்தப்பட்ட போதிலும் வரி விலக்கு அனுமதிக்கப்படலாம்.

– ப.மொய்தீன் ஷேக் தாவூது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.