மோடி பிபிசி ஆவணப்படம்: மொபைலில் பார்த்த பெண் கவுன்சிலர் – டக்கென பிடித்த போலீசார்

Modi BBC Documentary: 2002ஆம் ஆண்டு குஜராத்தில் மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த போது குஜராத்தின் முதல்வராக இருந்தவர் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி. தொடர்ந்து பிபிசி ஊடகம், குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டது. இதில் சில சர்ச்சைக்குரிய கருத்துகள் உள்ளதாக பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இரண்டு பாகங்களாக வெளியாகி உள்ள இந்த ஆவணப்படம், “இந்தியா: தி மோடி கொஸ்டின்” என்ற பெயரில் பிபிசி வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் வெளியான நிலையில், இரண்டாம் பாகம் சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்த ஆவணப்படம் ஒரு சாராரின் கருத்தைப் பரப்புரை செய்யும் வகையில் இருப்பதாகவும் உண்மைக்கு புறம்பான தகவல்களை கொண்டிருப்பதாகவும் எதிர்ப்புகள் வலுத்தன.

இதையடுத்து, மத்திய அரசு இந்த ஆவணப்படத்தின் இரண்டு பாகங்களுக்கும் இந்தியாவில் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த ஆவணப்படத்தின் இணைப்புகள் (Link)கொண்ட ட்வீட்களும், பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் இருந்தும் நீக்கப்பட்டு வருகின்றன. யூ-ட்யூப்பிலும் இந்த ஆவணப்படம் நீக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த தடை நடவடிக்கைக்கு நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

அந்த வகையில், இந்தியாவின் பல இடங்களில் அதனை திரையிட்ட மாணவர்கள் மீதான கைது நடவடிக்கையை கண்டித்தும் சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள டி.பி சத்திரம், கீழ்பாக்கம் கார்டன் சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மத்திய சென்னை DYFI சார்பில் மத்திய சென்னை மாவட்ட தலைவர் சித்தார்த்தன் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினரும், 98ஆவது வார்டு மாமன்ற உறுப்பினருமான பிரியதர்ஷினி,  பச்சையப்பாஸ் கல்லூரி மாணவரும், DYFI மத்திய சென்னை மாவட்ட செயற்குழு தலைவருமான விக்னேஷ் ஆகியேர் முன்னிலையில் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு இன்று மதியம் 2.05 மணிக்கு பிபிசியின் ஆவணப்படத்தை அவரவர் கைபேசியில் அதே இடத்தில் அமர்ந்து பாத்தனர். தகவல் அறிந்த போலீசார், 10க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களை டி.பி. சத்திரம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட கீழ்பாக்கம் கார்டன், விளையாட்டு திடல் தெருவில் அமைந்து  ஜெ. ஜெயலலிதா கைப்பந்து உள்விளையாட்டு அரங்கத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். கைது செய்த அவர்கள் மீது வழக்குப்பதிவு ஏதும் செய்யாமல் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.