பானிஹால்: “தனிப்பட்ட நலனுக்காக இல்லாமல், நாட்டில் நிலவி வரும் சூழலை மாற்றும் அக்கறையில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்றேன்” என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை, அதன் இறுதி பகுதியான ஜம்மு காஷ்மீரில் தற்போது நடந்து வருகிறது. சிறிய இடைவேளைக்கு பிறகு ஜம்மு காஷ்மீரின் பானிஹால் பகுதியில் இருந்து யாத்திரை வெள்ளிக்கிழமை காலை மீண்டும் தொடங்கியது. இதில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா கலந்துகொண்டு, ராகுல் காந்தியுடன் நடந்தார். யாத்திரையில் இருவரும் டி-ஷர்ட் அணிந்திருந்தனர்.