யாராக வேண்டுமானாலும் இரு, விவசாயியாகவும் இரு: கார்த்தி வேண்டுகோள்

நடிகர் கார்த்தி உழவன் பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். விவசாயிகளை ஒருங்கிணைப்பது, இயற்கை விவசாயத்தை பரப்புவது உள்ளிட்ட பணிகளை இவர்கள் செய்து வருகிறார்கள். அதோடு ஆண்டு தோறும் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து அவர்களுக்கு உழவர் விருதும், ஒரு லட்சம் ரூபாய் பரிசும் வழங்கி வருகிறார்.

இந்த ஆண்டுக்கான உழவர் விருது விழா நடந்தது. இதில் 4 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நடிகர்கள் சிவகுமார், ராஜ்கிரன், பொன்வண்ணன், இயக்குனர் பாண்டிராஜ், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டர்.

இந்த விழாவில் கார்த்தி பேசியதாவது: உழவன் அறக்கட்டளை தொடங்கிய புதிதில் விவசாயத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நாமும் செய்யலாம் என்று நினைத்தேன். சமுதாயத்தில் விவசாயத்தை நோக்கி என்னென்ன விஷயங்கள் குறைவாக இருக்கிறது என்று பார்க்கும் போது, விவசாயிகளின் மீதுள்ள மரியாதையும், அறிவும் குறைவாக இருக்கிறது என்று தோன்றியது. அவர்களை அங்கீகரிப்பதும், அடையாளப்படுத்துவதும் முக்கியமாக இருக்கிறது. இவர்கள் தான் நமது கதாநாயகர்கள், இவர்கள் தான் நம்முடைய சமூகத்திற்கு தேவைப்படுபவர்கள் என்று அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் உழவர் விருதுகளை தொடங்கினோம்.

நம்முடைய குழந்தைகளுக்கு சாப்பாட்டை வீண் செய்யாதீர்கள் என்று கூறுவோம். ஆனால், சாப்பாடு எங்கிருந்து வருகிறது என்று சொல்லித் தருகிறோமா? உணவை எப்படி தயாரிக்கிறார்கள்? என்று சொல்லிக் கொடுக்கிறோமா? பள்ளிகளில் அதற்கான பார்வையிடல் இருக்கிறதா? என்று யோசித்துப் பார்க்கிறேன். சில பள்ளிகளில் விவசாயத்திற்கென ஒரு வகுப்பை தனியாகவே ஒதுக்குகிறார்கள். ஆனால், அனைத்து பள்ளிகளிலும் விவசாய சுற்றுலா கட்டாயமாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இப்போது உணவு உற்பத்தி 2 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாக குறைந்துகொண்டே வருகிறது என்று கூறுகிறார்கள். இருப்பினும் இன்னும் நமக்கு உணவு கிடைக்கிறதென்றால், விவசாயத்தை விட மாட்டேன், போராடியே தீருவேன் என்று ஒரு தலைமுறையே போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த தலைமுறைக்கு அடுத்த தலைமுறை தயாராக இருக்கிறதா? என்று கேட்டால், பயமாகத்தான் இருக்கிறது. அதை நாம் தான் தயார் செய்தாக வேண்டும். மருத்துவராக இரு, பொறியாளராக இரு, கலெக்டராக கூட இரு, ஆனால் விவசாயியாகவும் இரு என்பதுதான் இப்போதைய தேவையாக இருக்கிறது.

இவ்வாறு கார்த்தி பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.