மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளை கட்டுவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தற்போது மும்பையிலிருந்து டெல்லிக்கு 12 மணி நேரத்தில் செல்லும் வகையில் புதிய விரைவு நெடுஞ்சாலையை அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு புதிய சாலை அமைக்கபட்டு வருகிறது.
இந்நிலையில் புனே பிம்ப்ரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் நடந்த உரையாடலில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். இந்த கலந்துரையாடலின் போது மறைந்த தொழிலதிபருடனான தனது பழைய நினைவுகள் குறித்து நிதின் கட்கரி நினைவு கூர்ந்தார்.

நிதின் கட்கரி. “புனே எனக்கு ஏராளமானவற்றை கற்றுக்கொடுத்திருக்கிறது. நான் மகாராஷ்டிரா அமைச்சராக இருந்த போது மும்பை-புனே சாலையை கட்டியதற்காக பெருமைப்படுகிறேன். திருபாய் அம்பானி இந்த சாலையை கட்ட ரூ.3,600 கோடிக்கு மிகவும் குறைந்த பட்ச தொகைக்கு டெண்டர் கொடுத்திருந்தார். சட்டப்படி சாலை அமைக்கும் பணியை அவருக்குத்தான் கொடுக்கவேண்டும். ஆனால் டெண்டர் தொகை 1,800 கோடி அதிகமாக இருப்பதாக நான் கருதினேன். பாலாசாஹேப் தாக்கரேயும், பிரமோத் மகாஜனும் சட்டப்படி வேலை நடக்கட்டும் என்று சொன்னார்கள்.
ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. டெண்டர் ரத்து செய்யப்பட்டது. இதனால் திருபாய் அம்பானி என் மீது கோபப்பட்டார். குறைந்த பட்ச தொகைக்கு டெண்டர் கேட்டு இருப்பதால் எங்களுக்குத்தான் பணியை வழங்கவேண்டும் என்று என்னிடம் தெரிவித்தார். நானே நேரடியாக அவரிடம் பேசினேன். ஆனால் இந்த அளவுக்கு குறைந்த தொகையில் இச்சாலையை அமைக்க முடியாது என்று என்னிடம் தெரிவித்தார். உடனே நான் இரண்டு ஆண்டில் இந்த சாலையை கட்டி முடிக்கவில்லையெனில் எனது மீசையை எடுத்துக்கொள்கிறேன் என்று அவரிடம் சொன்னேன்.

உடனே அவர்கள் புறப்பட்டு சென்றுவிட்டார்கள். அதனை தொடர்ந்து மகாராஷ்டிரா சாலை மேம்பாட்டுக்கழகம் அமைக்கப்பட்டு அதன் மூலம் இரண்டு ஆண்டில் 1,600 கோடி ரூபாயில் இச்சாலையை கட்டி முடித்தோம். சாலை கட்டி முடிக்கப்பட்ட பிறகு திருபாய் அம்பானி என்னை நேரில் அழைத்து என்னிடம் தோற்றுவிட்டதாக தெரிவித்தார்” என்று நிதின் கட்கரி தனது பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.
1995ம் ஆண்டு மகாராஷ்டிராவில் சிவசேனா அரசு பதவியில் இருந்த போது நிதின் கட்கரி, கோபிநாத் முண்டே, பிரமோத் மகாஜன் போன்றவர்கள் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.