அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்தையா இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.
வரும் பிப்ரவரி 5ஆம் தேதி பரமக்குடியில் நடைபெற உள்ள இந்த திருமண நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்பதால் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இந்த ஏற்பாடுகள் அனைத்தும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி பரமக்குடி வரும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு காவல்துறை சார்பில் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மற்றும் அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் மனு அளித்தனர்.
முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் திருமண விழா நடைபெற உள்ள இடத்தை ஆர்.பி உதயகுமார் ஆய்வு செய்தார். எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக ராமநாதபுரம் மாவட்டம் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.