உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 2024ஆம் ஆண்டு ஜனவரிக்குள் ராமர் கோயில் தயாராகிவிடும் என மத்திய அமைச்சர் அமித் ஷா இந்தாண்டு தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.
உயர்தர சிற்பிகள் கோயிலின் வெளிப்புறத்தை உருவாக்கி வருகின்றனர். அதில், இரண்டு பெரிய பாறைகள் நேபாளத்தில் இருந்து அனுப்பப்படுகின்றன. ராமர்-சீதை சிலைகளை செதுக்குவதற்காக அயோத்தி கோயிலுக்கு பெரிய பாறைகள் எடுத்துவரப்படுகின்றன. ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் பொதுச் செயலாளர் சம்பத் ராய்,”சிலைகளை உருவாக்க ஷாலிகிராம ஷிலா பாறைகள் பயன்படுத்தப்படுமா இல்லையா என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட நிலையில், சிலைகள் தயாரிப்பதற்கு மக்ரானா மார்பில் கற்கள் பயன்படுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் எதுவும் இறுதி செய்யப்படவில்லை.
நேபாளத்தில் உள்ள காளி கண்டகி நதியில் இருந்து எடுக்கப்படும் ஷாலிகிராம் ஷிலா என்ற ஒருவகை பாறைகளில் அயோத்திக்கு இரண்டு பாறைகளை அனுப்ப உள்ளனர். கடந்த ஜன. 26 அன்று இரண்டு புனித கற்களை ஜனக்பூர்தாமுக்கு ஒப்படைக்கும் விழாவிற்கு போகாராவில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இரண்டு டிரக்குகளைப் பயன்படுத்தி அந்த பாறைகள் கொண்டு செல்லப்படுகின்றன. கான்வாய்கள் ஜனக்பூர்தம், மதுபானியின் பிப்ரூன் கிர்ஜஸ்தான், முசாபர்பூர் மற்றும் கோரக்பூர் வழியாக அயோத்தியை அடையும். இது பிப்ரவரி 1ஆம் தேதி அயோத்தியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, நேபாளத்தைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் அந்த பாறைகளை பிரார்த்தனை செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த கற்கள் 350 டன் எடையும், ஏழு அடி நீளமும் கொண்டவை. புவியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் குழுவால் கற்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடிக்கும் வல்லமை படைத்தது என்றும் பூகம்பங்களால் சேதமடையாது என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
The Shaligram stone from Gandaki river, Nepal taken to #Ayodhya for carving of the Sita Rama deities.#ayodhyarammandir pic.twitter.com/7j52ZvOeMJ
— RP Singh National Spokesperson BJP (@rpsinghkhalsa) January 28, 2023
நாராயணி என்று பிரபலமாக அறியப்படும் காளி கண்டகி நதிதான் ஷாலிகிராம ஷிலாவின் (அந்த வகை பாறைகளின்) ஒரே ஆதாரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஷாலிகிராம் சிலாக்கள் விஷ்ணுவாகவும், ராமர் விஷ்ணுவின் அவதாரமாகவும் போற்றப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பரில், ராமர்-சீதை சிலைகளை உருவாக்க காளி கண்டகி நதியில் இருந்து கற்களைப் பெறுவதற்கான யோசனையை வரவேற்று நேபாளத்தின் ஜானகி கோயிலுக்கு சம்பத் ராய் கடிதம் எழுதியிருந்தது நினைவுக்கூரத்தக்கது.