சேலம்: அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு குழந்தைகள் கிடையாது என்றும், நாம்தான் அவர்களுடைய வாரிசுகளாக இருந்து அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்றும் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் மேலகவுண்டம்புதூரில் இலவச முதியோர் இல்லத்தை அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைத்தார். பின்னர், பேசிய அவர், “ஏழை என்ற சொல்லே இல்லாத நிலையை உருவாக்குவதுதான் அதிமுகவின் கொள்கை, லட்சியம். மறைந்த முதல்வர் அண்ணா கூறிய, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பதை மறைந்த முதல்வர்களான எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் நிறைவேற்றிக் காட்டியவர்கள். இப்படிப்பட்ட தலைவர்கள் வழியிலே வந்த அதிமுகதான் ஏழைகளுக்கு உதவுகின்ற கட்சி.
அதிமுகவின் பாரம்பரியத்தைப் பார்கின்றபோது, அண்ணாவுக்கு குழந்தைகள் கிடையாது. எம்ஜிஆருக்கு குழந்தைகள் கிடையாது. ஜெயலலிதாவுக்கு குழந்தைகள் கிடையாது. நாம்தான் அவர்களுடைய குழந்தைகள். அவர்களுடைய வாரிசுகளாக இருந்து அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
திமுகவைப் பொருத்தவரை இப்படிப்பட்ட நிகழ்ச்சியை எங்கேயுமே தொடங்கி வைத்திருக்கமாட்டார்கள். அதிமுக நிர்வாகிகள்தான் ஏழைகளுக்கு நன்மை செய்து அதன்மூலம் இறைவனுடைய அருளைப் பெறுகின்றனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட பலருக்கும் மாதம் ரூ.1000 முதியோர் உதவித் தொகையை வழங்கினார். அவருடைய மறைவுக்குப் பின்னர், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முதியோர் உதவித் தொகை கிடைக்கப்பெறவில்லை என்று கேள்விப்பட்டவுடன், சட்டமன்ற விதி 110-ன் கீழ், தமிழ்நாடு முழுவதும் ஆதரவற்ற தகுதியான 5 லட்சம் முதியோருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை நான் வெளியிட்டேன். இதன்மூலம் 4.50 லட்சம் பேர் பயன் அடைந்தனர். ஆனால், இன்றைய முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன், உழைக்கும் திறனற்ற ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட முதியோர் உதவித் தொகையை நிறுத்தியது” என்று அவர் பேசினார்.