அதானி நிறுவன விவகாரத்தை வைத்து, பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் அமளியில் இறங்கியுள்ளதால், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு நிகழ்த்திய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை நடத்த, இரு சபைகளும் தயாராகின.
ஆனால், அதானி நிறுவன விவகாரத்தை வைத்து, எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் ரகளையால், நேற்று முன்தினம் விவாதம் நடைபெறவில்லை.
நேற்று இந்த விவாதத்தை நடத்த லோக்சபாவில் சபாநாயகர் ஓம் பிர்லாவும், ராஜ்யசபாவில் இதன் தலைவர் ஜகதீப் தன்கரும் முயன்றனர்.
ஆனால், லோக்சபாவில் கேள்வி நேரத்தை துவக்கியதும், அமளியும் துவங்கியது.
‘ஏழைகளின் பணம் கொள்ளை; ஜே.பி.சி., விசாரணை வேண்டும்’ என்ற எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் குரல்களால் சபை அதிர்ந்தது.
அப்போது பேசிய ஓம் பிர்லா, ”நாட்டின் உயரிய ஜனாதிபதி பதவிக்கு, பழங்குடியின சமூகத்திலிருந்து வந்த திரவுபதி முர்மு நிகழ்த்திய உரையை, நீங்கள் பொருட்படுத்த மறுக்கிறீர்கள்.
”இது, அவரை அவமரியாதை செய்வதுபோல உள்ளது. எனவே, சபையை நடத்த ஒத்துழைப்பு தாருங்கள்,” என்றார்.
இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், ‘பொதுமக்களுக்கு சொந்தமான, எல்.ஐ.சி., பணமும், ஸ்டேட் பேங்க் பணமும், அதானி நிறுவனத்திற்கு ஏன் தரப்பட்டது என்பதை விவாதித்துவிட்டு, மற்றதை பிறகு பேசலாம்’ என்றனர். இதனால் சபை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
ராஜ்யசபாவிலும் காலையில் இருந்தே ரகளை தான். அப்போது சபைத்தலைவர் ஜக்தீப் தன்கர், ”அனைத்து அலுவல்களையும், விதி எண் 267ன் கீழ் ரத்து செய்ய வேண்டுமென 15 ‘நோட்டீஸ்’கள் வந்துள்ளன. ஆனால், இவை எதுவுமே சபை விதிகளுக்கு ஒத்துப் போகவில்லை. எம்.பி.,க்கள், சபைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்,” என எச்சரித்தார்.
இதை மீறி காங்., திரிணமுல் காங்., தேசியவாத காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கூக்குரல் இட்டதால், சபை மதியம் 2:30 வரை ஒத்திவைக்கப் பட்டது.
மதிய உணவு இடைவேளைக்குப் பின்னும் லோக்சபா, ராஜ்யசபா இரண்டிலும் காட்சிகள் மாறாததால், இரு சபைகளும் திங்கள் வரை ஒத்தி வைக்கப்பட்டன.
பின் நிருபர்களிடம் பேசிய பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, ”அதானி நிறுவன விவகாரத்திற்கும், மத்திய அரசுக்கும் எந்த தொடர்பு இல்லை. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் முக்கிய அலுவல்.
”இதை, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ஏற்க மறுக்கின்றனர். அவர்களுக்கு முக்கிய விஷயம் எதுவும் கைவசம் இல்லை,” என்றார்.
– நமது டில்லி நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்