பாகிஸ்தானின் தலிபான்களின் அட்டூழியத்தை அடக்க.. ஆப்கான் தலிபான் உதவியை நாடும் பாக். அரசு!

பெஷாவர்: பாகிஸ்தான் தலிபான் அமைப்பினரின் தாக்குதலால் நிலை குலைந்து போயுள்ள பாகிஸ்தான் அரசு, அந்த அமைப்பை ஒடுக்க, ஆப்கானிஸ்தான் தலிபான்களின் தலைவர் ஹபைட்டுல்லா அகுண்டாசாவின் உதவியை நாடியுள்ளது.

பாகிஸ்தானில், பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி நாட்டை அதிர வைத்து வருகின்றனர். சமீபத்தில் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் அவர்கள் நடத்திய பெரும் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனால் இவர்களை எப்படி அடக்குவது என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளது பாகிஸ்தான் அரசு.

பெரும்பாலான தாக்குதல்கள் கைபர் பக்துன்குவா மாகாணத்தில்தான் நடக்கிறது. அதேசமயம், பலுசிலஸ்தான், பஞ்சாப் ஆகிய மாகாணங்களிலும் கூட பாகிஸ்தான் தலிபான்கள் தாக்குதல் நடத்துகின்றனர். பெஷாவரில் ஒரு தீவிரவாதி தனது உடலில் வெடிகுண்டுகளைக் கட்டி வந்து தற்கொலைப் படையாக தாக்குதல் நடத்தினான். மசூதியின் உள்ளே நூற்றுக்கும் மேற்பட்டோர் தொழுகையில் இருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தான் தலிபான்களின் அட்டூழியத்தை முடிவுக்குக் கொண்டு வர, ஆப்கானிஸ்தான் தலிபான் தலைவர் ஹைபட்டுல்லாவின் உதவியை பாகிஸ்தான் அரசு நாடியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா கூறுகையில், பெஷாவர் தாக்குதலின் மூளை ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் பேசப்படும் என்றார்.

இலங்கை தவறுகளையும், தோல்விகளையும் திருத்திக் கொள்ள வேண்டும் .. ரணில் விக்கிரமசிங்கே

இதற்கிடையே, இந்தத் தாக்குதல் உளவுத்துறை தோல்வி என்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஒத்துக் கொண்டுள்ளார். தேசிய அளவில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தீவிரவாதத்தை ஒடுக்க உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பாகிஸ்தான் தலிபான்களுக்கு, அல் கொய்தாவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் பிரதமர், வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை கொல்வோம் என்று இந்த அமைப்பு ஏற்கனவே மிரட்டல் விடுத்துள்ளது நினைவிருக்கலாம்.

பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பல்வேறு தீவிரவாத அமைப்புகளை இணைத்துத்தான் 2007ம் ஆண்டு பாகிஸ்தான் தலிபான்கள் அமைப்பு உருவாக்கப்பட்டது. நாடு முழுவதும் தீவிர தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு தனது அமைப்பினரை அது கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அடுத்தடுத்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

2009ம் ஆண்டு ராணுவ தலைமையகத்தில் நடந்த தாக்குதல், 2008ம் ஆண்டு இஸ்லாமாபாத்தின் மரியாட் ஹோட்டலில் நடந்த குண்டுவெடிப்பு ஆகியவற்றுக்கு இவர்களே காரணம். 2014ம் ஆண்டு பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளிக்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியதில் 131 மாணவர்கள் உள்பட 150 பேர் பலியானார்கள் என்பது நினைவிருக்கலாம்.

தற்போதைய பெஷாவர் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனால் இந்த அமைப்பு மீதான தனது பிடியை இறுக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.