நாகர்கோவில்: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுகவுக்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. உச்சநீதிமன்றத்தின் ஆணையை ஏற்றுக்கொள்கிறோம். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை சேர்த்துக்கொண்டு ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
ஏற்கெனவே ஓ.பன்னீர்செல்வம் ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என்று தான் கூறிவருகிறார். எனவே, உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒருங்கிணைப்பாளருடன் கலந்து ஆலோசித்து ஈரோடு தொகுதி வேட்பாளரை முடிவு செய்ய வேண்டும். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும்.
ஓபிஎஸ் உடன் ஆலோசித்து முடிவெடுக்கும் பட்சத்தில், அவரது சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் வாபஸ் பெறுவது குறித்து முடிவு செய்யப்படும். சசிகலாவுக்கு பழனிசாமி துரோகம் செய்துள்ளார். ஏற்கெனவே நடந்து முடிந்த பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் அதிமுக மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
இதற்கு பழனிசாமி தான் முழு பொறுப்பாவார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உள்ளது. பாஜகவுக்கும் கொள்கை உண்டு. அந்த கட்சியை கண்டு எங்களுக்கு பயமில்லை. மரியாதை தான் உள்ளது.திராவிட இயக்கத்துக்கு 55 ஆண்டு கால வரலாறு உள்ளது. பேனாவை வைத்து தான் கலைஞரை அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
கலைஞரின் எழுத்துக்கு என்று தனி மரியாதை உள்ளது. ஆனால் பேனா வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.