அதானி குழுமம் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை

புதுடெல்லி: அதானி குழும முறைகேடு குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கையை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையிலான குழு மூலம் விசாரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவினை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

வழக்கறிஞர் விஷாஸ் திவாரி என்பவர், அதானி குழுமம் குறித்த ஹிண்டன்பெர்க் அறிக்கை மீது விசாரணை கோரும் மனு ஒன்றினை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் அமர்வு முன் வியாழக்கிழமை தாக்கல் செய்தார். அவர் தனது மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும், “இதேபோன்ற மனு ஒன்று நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஜே.பி. பத்ரிவாலா அமர்வு முன்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் நற்பெயரைக் கெடுத்து, நஷ்டத்தை ஏற்படுத்திய ஹிண்டன்பர்க் அறிக்கைப் பற்றிய அந்த மனு பிப்.10-ம் தேதி வெள்ளிக்கிழமை விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த மனுவும் உடனடியாக தனி மனுவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி, அந்த மனுவை பட்டியலிட உத்தரவிட்டார்.

வழக்கறிஞர் திவாரி தாக்கல் செய்திருந்த அந்தப் பொதுநல மனுவில், “பல்வேறு காரணங்களால் பங்குச்சந்தைகளில் பங்குகளின் மதிப்பு வீழ்ச்சியடையும்போது, அது மக்களின் தலைவிதியை மாற்றி, அவர்களை கடுமையான சூழ்நிலைக்குள் தள்ளிவிடும். பல்வேறு மக்கள் தங்களின் வாழ்நாள் சேமிப்பை இத்தகைய பங்குகளில் முதலீடு செய்துள்ளனர். அத்தகைய பணம் மொத்தமாக மூழ்கிப்போவது அவர்களின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும்.

அதானி சாம்ராஜிஜ்யத்தின் மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை தொடுத்த தாக்குதலால், 10 அதானி நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது, முதலீட்டார்களை பெரிதும் பாதித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலில் அதிகாரிகளால் எந்த உறுதியான நடவடிக்கைகளும் எடுக்க முடியவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனுவில் மத்திய அரசுடன் இந்திய ரிசர்வ் வங்கி, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி உள்ளிட்ட அமைப்புகளும் பிரதிவாதிகளாக இணைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி ஓர் அறிக்கையை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்தது. இதனிடையே, ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை பொய்யானது என்றும் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டது என்றும் அதானி குழுமம் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.