ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம்: அள்ள அள்ள அற்புதம்… இனி பேட்டரி யுகம்!

ஜம்மு காஷ்மீரில் லித்தியம் என்ற உலோகம் கண்டுபிடிக்கப்பட்டது சர்வதேச அளவில் முக்கியமான செய்தியாக மாறியுள்ளது. இந்தியாவில் முதல்முறை அதுவும் 5.9 மில்லியன் டன் அளவிற்கு கொட்டிக் கிடக்கிறது என்றால் சும்மாவா? இதை வைத்து இந்தியாவின் எதிர்காலமே மாறப் போகிறது என்றெல்லாம் பேசத் தொடங்கியுள்ளனர். முதலில் லித்தியம் என்றால் என்ன? அதன் தேவை எங்கெல்லாம் இருக்கிறது? என்பதை புரிந்து கொண்டால் ஜம்மு காஷ்மீரில் கிடைத்த லித்தியத்தின் மதிப்பு தெரிந்துவிடும்.

லித்தியம் என்றால் என்ன?

லித்தியம் என்பது வெள்ளி போன்று தோற்றமளிக்கக் கூடிய ஒரு உலோகம். மிகவும் மென்மையானது. பூமிக்கு அடியில் இருந்து அரிதாக கண்டெடுக்கப்படுகின்றன. அதிக வெப்பத்தை தாங்கக் கூடியவை. பேட்டரி தயாரிப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கண்ணாடி வெப்பத்தை தாக்கு பிடிக்கவும், வெப்ப மண்டலப் பகுதிகளில் கட்டிடங்களில் கட்டுமானப் பொருளாகவும் பயன்படுகிறது.

பேட்டரி தயாரிக்கும் உலோகம்

மருத்துவத் துறையிலும் இதன் பயன்பாடு அவசியமானதாக இருக்கிறது. பருவநிலை மாறுபாடு காரணமாக மாசுபாட்டை குறைத்து மாற்று எரிபொருளை நோக்கி உலக நாடுகள் பயணித்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் மின்சார வாகனங்களின் தேவை நாளுக்கு அதிகரித்து வருகிறது. இவற்றின் பேட்டரி தயாரிப்பில் லித்தியம் தான் மூலப்பொருள் என்பது கவனிக்கத்தக்கது.

மின்சார வாகனப் பயன்பாடு

பல்வேறு நாடுகளும் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை படிப்படியாக குறைத்து விட்டு மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றன. மின்சார வாகனங்கள் என்றாலே பேட்டரி கட்டாயம் தேவை. அதற்கு லித்தியம் அவசியம். மின்சார வாகனப் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க லித்தியத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உண்டாகும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரில் சர்ப்ரைஸ்

இப்படிப்பட்ட சூழலில் ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டம் சலால் – ஹைமானா பகுதியில் 5.9 மில்லியன் டன் அளவிற்கு லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு வரப் பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது. இனிமேல் வெளிநாடுகளை நோக்கி இந்தியா கையேந்தி நிற்க வேண்டிய அவசியமில்லை. லித்தியம் கண்டறியப்பட்ட பகுதி தற்போது சம்பந்தப்பட்ட அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

சுங்கத்துறை நடவடிக்கை

இதைக் கொண்டு மின்சார வாகனங்களுக்கு அதிக அளவில் பேட்டரிகள் செய்ய முடியும். இதனால் பேட்டரியின் விலை குறையும். இதன் தொடர்ச்சியாக மின்சார வாகனங்களின் விலையும் பெரிதும் குறையும் என்பதில் சந்தேகமில்லை. முன்னதாக மத்திய சுங்கத்துறை அமைச்சகம் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக கனிமங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது.

தொடரும் ஆராய்ச்சி

இதன் அறிக்கை நேற்றைய தினம் சமர்பிக்கப்பட்ட சூழலில் லித்தியத்தின் இருப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி பொட்டாசியம், மாலிப்டினம் ஆகிய வளங்கள் குறித்தும் விரிவான தகவல்கள் கிடைத்துள்ளன. அடுத்தகட்டமாக புவியியல் ஆராய்ச்சி மையம் இந்த வளங்கள் தொடர்பான ஆய்வை முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.