நெல்லையப்பர் கோயில் சார்பில் கொண்டாடப்படும் மகா சிவராத்திரி விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு

நெல்லை: நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில் சார்பாக வருகின்ற 18.02.2023 அன்று நடைபெறவுள்ள மகாசிவராத்திரி விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; முதலமைச்சர் உத்தரவின்படி, கடந்த ஆண்டு மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் சார்பில் மகாசிவராத்திரி விழா சிறப்பாக நடத்தப்பட்டது.

இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். 2022- 2023 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையில், மகாசிவராத்திரி பெருவிழா 5 திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர், அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில், பேரூர், அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருநெல்வேலி, அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்கள் சார்பில் மகாசிவராத்திரி விழா கொண்டாட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை நேரில் ஆய்வு செய்து அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் சார்பில் மகாசிவராத்திரி விழா கொண்டாட தேர்வு செய்யப்பட்டுள்ள பாளையங்கோட்டை, சமாதானபுரம், அருள்மிகு ஆயிரத்தம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான  மைதானம் மற்றும் திம்மராஜபுரம், அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயிலுக்குச் சொந்தமான இடம் ஆகிய இடங்களை பார்வையிட்டோம். அதில் அருள்மிகு ஆயிரத்தம்மன் திருக்கோயில் மைதானம் தேர்வு  செய்யப்பட்டுள்ளது.

இங்கு நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் தென்மாவட்டங்களின் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களின் அரங்குகள், ஆன்மிக புத்தக விற்பனை நிலையம், பழமையான இசைக் கருவிகளை காட்சிப்படுத்துதல் போன்றவற்றோடு பக்தர்களுக்கு பக்தி பரவசமளிக்கும் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளன. நெல்லை மாவட்டத்தில் வசிக்கின்ற மக்களுக்கு மன நிறைவை தருகின்ற சிவராத்திரியாக இது அமையும். பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, வாகனம் நிறுத்தும் வசதி போன்றவற்றை சிறப்பாக செய்து தர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்தகைய வசதிகளுடன் மகாசிவராத்திரி விழாவை நடத்துவதற்கு பெரிய அளவிலான இடம் அருள்மிகு நெல்லையப்பர் கோயிலுக்குள் இல்லாததால் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த இடத்தை தேர்வு செய்துள்ளோம். நெல்லை மாவட்டம் மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் மகாசிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாட அனைத்து நடவடிக்கைகளும் திருக்கோயில் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் செந்தில்குமார், மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.